ரெப்போ விகிதத்தை 6.5% ஆக உயர்த்தியது ரிசர்வ் வங்கி - வீட்டு கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வீடு மற்றும் வாகன கடன்களுக்கான தவணைத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.5 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

உலகப்பொருளாதாரம் அத்தனை கவலையளிக்கும் விதமாக தற்போது இல்லை. பணவீக்கமும் குறைந்து வருகிறது. 2023 - 24ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.4 சதவீதமாக இருக்கும். உலக நாடுகள் பலவற்றின் பொருளாதார நிலை கொந்தளிப்பாக இருக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருக்கிறது. சில்லறை பணவீக்கம் நான்காவது காலாண்டில் 5.6 சதவீதமாக இருக்கும். 2022-23ம் ஆண்டுக்கான சிபிஐ பணவீக்கம் 6.5 சதவீமாக இருக்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளதால், வீடு, வாகனக்கடன்களுக்கான தவணைத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா -உக்ரைன் போர் மூண்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெளிபுற காரணிகளால், அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 2.5 புள்ளிகள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE