சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு காலத்தில் திருப்புமுனை பட்ஜெட்டுகள் - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

பட்ஜெட் வழியாகவே ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதை தீர்மானிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947-ல் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா பொருளாதாரத்திலும் கல்வியிலும் மிகவும் பின்தங்கி இருந்தது. எனினும், அந்த ஆண்டு பட்ஜெட் நிதியில் 46 சதவீதம் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஏனென்றால், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான ராணுவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது.

உணவுத் தட்டுப்பாடு உச்சம் தொட்டிருந்த நிலையில், 1950-களின் முற்பகுதியில் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிற்பகுதியில், தொழில் கட்டமைப்பில் கவனம் செலுத்தப்பட்டது. நேருவின் காலகட்டத்தில் சோசலிச பொருளாதார இலக்கைக் கொண்டிருந்த இந்தியா, 1980-களுக்குப் பிறகு தாராளப் பொருளாதாரத்தை நோக்கி மிக வேகமாக நகரத் தொடங்கியது.

இப்படியாக, நாட்டின் அப்போதைய தேவைக்கு ஏற்ப பொருளாதார முடிவுகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன.சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால பொருளாதார பயணத்தில், பெரும் மாற்றம் ஏற்படுத்திய பட்ஜெட்டுகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்…

2000: இந்தியாவில் மென்பொருள் துறை மிகப் பெரும் வளர்ச்சியை எட்டி இருப்பதற்கு 2000-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு முக்கியக் காரணம் ஆகும். மென்பொருள் சேவை ஏற்றுமதியின் மையமாக இந்தியாவை உருவாக்க திட்டமிடப்பட்டது. மென்பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டன. கணினி சார்ந்த பொருள்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

1997: காங்கிரஸ் ஆதரவில் ஜனதா தள கட்சியின் தேவ கவுடா பிரதமராக இருந்தார். ப. சிதம்பரம் நிதி அமைச்சர். ஆட்சி ஸ்திரமற்றதாக இருந்த காலகட்டம். இந்தச் சூழலில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட், இந்திய வரி நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இந்தியாவின் தனிநபர் மற்றும் நிறுவன வரியில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. வருமான வரி 40 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

உள்நாட்டு நிறுவனங்கள் மீதான வரி 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான வரி 55 சதவீதத்திலிருந்து 48 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. இந்த பட்ஜெட் ‘கனவு பட்ஜெட்’ என்று அழைக்கப்படுகிறது.

1991: இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பட்ஜெட் பட்ஜெட் என்றால், அது 1991-ம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்தான். அந்த சமயத்தில் இந்தியா பொருளாதா ரீதியாக மிகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது. மூன்று வாரங்களுக்கான இறக்குமதியை சமாளிக்கும் அளவுக்குதான் அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. பொருளாதாரக் கொள்கையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது.

அதுவரையில் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்குக் கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. இந்நிலையில் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பொதுத் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. லைசன்ஸ் ராஜ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இந்தப் பட்ஜெட்டால் இந்தியாவில் வாகனத் துறை, தொலைத்தொடர்புத் துறை, மென்பொருள் துறை, மருந்துத் தயாரிப்புத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை ஆகியவை பெரும் வளர்ச்சி காணத் தொடங்கின.

1986: ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். விபி சிங் நிதி அமைச்சராக இருந்தார். உலக அளவில் பொருளாதார போக்குகள் மாறிக்கொண்டிருந்த நிலையில் அந்தப் போக்குடன் இந்தியாவை இணைக்கும் முயற்சி மேற்கொள்ள ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு திட்டமிட்டது. இந்தியா அதன் சோசலிச பொருளாதாரக் கொள்கைக்கு முழுமையாக விடைகொடுத்த காலகட்டம் இது. 1986-ம் ஆண்டு வி பி சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மறைமுக வரியில் மாற்றம் செய்யப்பட்டது.

தொழில் துறையினர் தேவையில்லாமல் மறைமுக வரி செலுத்துவதைக் குறைக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் உற்பத்தியாளர்கள் வரிச் சுமை குறைந்தது. உதிரிபாகங்கள், மூலப் பொருள்கள் மீதான விலையும் குறைந்தது. லைசன்ஸ் ராஜ் நடைமுறை ஒழிக்கப்பட்டதற்கான தொடக்கமாக இந்த பட்ஜெட் அமைந்தது. இந்தப் பட்ஜெட்டின் தொடர்ச்சியாக இந்தியா மாபெரும் சந்தையாக உருவெடுத்தது. உள்நாட்டில் வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

1970: இந்திரா காந்தி 1966-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற சமயத்தில், இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியையும் உணவுத் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டிருந்தது. இதனால் அவர் பொருளாதாரரீதியாக தீவிர சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார். இதன் தொடர்ச்சியாக, நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் வரி வருவாயை அதிகரிப்பது கட்டாயமானது என்ற நிலைப்பாட்டில் இருந்த இந்திரா காந்தி 1970-ம் ஆண்டு பட்ஜெட்டில் (அப்போது அவர்தான் நிதியமைச்சர்) வரி விகித்தை உச்சபட்சமாக உயர்த்தினார். ரூ.2 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான வரி 93.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

1957: ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் 1957-ல் டி டி கிருஷ்ணமாச்சாரியால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சொத்து வரி, செலவின வரி அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த வரிகள் கொண்டுவரப்பட்டன. இந்தியாவின் அந்நிய செலவணி கையிருப்பு மிகக் குறைவாக இருந்த நிலையில்,வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு கடும் கட்டுப்பாடும் இந்தப் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

35 mins ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்