2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டானது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யவுள்ள முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட் என்பதால் தொழில்துறையினரிடையும், பொதுமக்களிடையும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. முடங்கி கிடக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதத்திலும், நடுத்தர மக்கள் நெடுங்காலமாக எதிர்பார்த்துள்ள வரி சலுகை குறித்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய துறைகளின் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் பார்க்கலாம்.
வாகனத் துறை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வாகனத் துறைக்கு உள்ளது. ஏராளமான உட்பிரிவு தொழில்கள் இந்த துறையைச் சார்ந்தே உள்ளன. காலநிலை மாறுபாடு குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதற்கான நிதி மற்றும் மானிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வாகனத் தயாரிப்பாளர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
ஜவுளித் துறை: நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 22 சதவீதம் குறைந்துள்ளதற்கு பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரிதான் காரணம் என்பது ஜவுளி துறையினரின் கருத்தாக உள்ளது. எனவே, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதைப் போல , இனி ஆண்டுதோறும் அதுபோன்ற சலுகையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜவுளித் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
» திருமலையில் அத்துமீறி மாட வீதிகளில் சுற்றி வந்த கார் - மீண்டும் தலைதூக்கிய பாதுகாப்பு பிரச்சினை
மேலும், ஜவுளித் துறை இயந்திரங்கள் இறக்குமதிக்கு தற்போதுள்ள 5 சதவீத வரியை 7.5 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த முடிவை கைவிட வேண்டும் என ஜவுளி துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுகாதாரம்: கரோனா காலகட்டத்தில் மருந்து துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இருப்பினும், அந்த துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை இன்னும் அதிகமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அதிக நிதி ஒதுக்கீட்டை பட்ஜெட்டில் மருந்து நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன. இதன் மூலம், உலக அளவில் போட்டிகளை எதிர்கொண்டு ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என்பது மருந்து துறை நிறுவனங்களின் நம்பிக்கை.
ரியல் எஸ்டேட்: 2019-ல் உருவான கரோனா அலையால் இரண்டு ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் கடுமையான சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த ஓராண்டாக குடியிருப்புகளுக்கன தேவை அதிகரித்துள்ளது. எனவே, வீட்டு கடனில் சலுகை அறிவிப்புகளை இந்த துறை எதிர்நோக்கியுள்ளது.
விமானப் போக்குவரத்து: கரோனா பேரிடர் காரணமாக இரண்டு ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்த விமானப் போக்குவரத்து தற்போதுதான் உயிர்பெற ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், விமான எரிபொருள் விலை உயர்வு, விமான நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீள விமானப் போக்குவரத்து துறை பட்ஜெட்டில் நிதி சலுகை அறிவிப்புகளை எதிர்பார்த்துள்ளது.
சுற்றுலா: மந்த நிலையில் இருந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை கடந்த ஆண்டு பிற்பகுதியில் மீளத் தொடங்கியது. பட்ஜெட்டில் சுற்றுலா துறை தொடர்பான ஜிஎஸ்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்பதே அத்துறையினரின் விருப்பமாக உள்ளது.
வங்கி: நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு வங்கிகளின் சேவை மிக ஆதாரமானதாக உள்ளது. அந்த வகையில் வங்கி கட்டமைப்பு மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் மூலதன ஒதுக்கீடு பங்கு விற்பனை உள்ளிட்டவற்றில் தெளிவான அறிவிப்புகளை வங்கிகள் எதிர்நோக்கியுள்ளன.
தகவல் தொழில்நுட்பம்: உலகின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மையமாக இந்தியா மாறி வருகிறது. இந்த நிலையில் இந்த தொழில்நுட்பத்தை கிராமங்களின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் வகையில் விதிமுறைகளை எளிதாக்க வேண்டும். வரிச் சுமைகளை குறைப்பதன் வாயிலாக டிஜிட்டல் துறையில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட முடியும். அறிவுசார் சொத்துரிமை சட்டங்களில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பதே இந்த துறையினரின் பட்ஜெட் எதிர்பார்ப்பு.
தொலைத்தொடர்பு: பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கிராமப்புற பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. அதற்கான திட்டம் மற்றும் நிதி உதவிகளை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்பது தொலைத் தொடர்பு துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், இந்த துறையில் முதலீடுகளை ஊக்குவித்திட வரி சலுகைகளும் எதிர்பார்க்கப்படுகிறது. உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம், அதற்கான ஒதுக்கீடு ஆகியவற்றில் ஜிஎஸ்டி விலக்களிப்பதன் மூலம் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்க முடியும் என இத்துறைனர் தெரிவித்துள்ளனர்.
வேளாண்மை: நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் வேளாண் தொழிலை ஊக்குவிக்க பயிர் பாதுகாப்பு ரசாயனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்பது இந்த துறையினரின் பட்ஜெட் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், ஆராய்ச்சிகளை பரந்த அளவில் மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என இந்திய வேளாண் ரசாயன கூட்டமைப்பு (ஏசிஎப்ஐ) அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago