மத்திய பட்ஜெட் மீது தொழில் வணிகத் துறைக்கு எதிர்பார்ப்புகள் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட் மீது தொழில் வணிகத் துறைக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சங்கத்தின் தலைவர் என்.ஜெகதீசன் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1-ல் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு, வரிச் சலுகைகள், கிராமப்புறப் பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலாத் துறை என தொழில் வணிகத் துறைக்கு பல எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

மத்திய பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையால் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு உலக நாடுகளுடன் நமது நாடும் கொண்டாடி வருகிறது.

இது இந்திய நாகரிகத்தின் ஒரு பகுதியாக மற்றும் உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் திறன் கொண்டது.சிறுதானியத்தின் தேவை உலகளவில் மிகவும் அதிகரித்து வருகிறது, இந்த வாய்ப்பை நமது விவசாயிகளும், இளம் தொழில் முனைவோரும் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விவசாயிகளை ஊக்குவித்து, சிறுதானியங்களை அதிகளவில் சாகுபடி செய்ய ஏதுவாக, பயிர்ப் பாதுகாப்புப் பொருட்கள், வேளாண் உபகரணங்கள், விதைகள் மற்றும் பிற இடுபொருட்களுக்கு வரிச்சலுகை வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

அதிகரித்து வரும் இடுபொருள் விலை விவசாயிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. அதனால், இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE