அஞ்சலகங்களில் ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு திட்டம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக. ஆண்டுக்கு ரூ.399 மற்றும் ரூ.396 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அஞ்சலக ஊழியர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மூலமாக விரல் ரேகை பதிவிட்டு, 5 நிமிடங்களில் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

டிஜிட்டல் முறையில் பாலிசி செய்து ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு பெறலாம். விபத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள் நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை) பெற்றுக் கொள்ளலாம். விபத்தில் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி ரூ.ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்துக்கான பயண செலவுகளுக்காக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். விபத்தில் உயிரிழந்தவரின் இறுதி சடங்குக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

விபத்து காப்பீட்டு பாலிசியை பெறுபவரின் குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், அஞ்சலகங்கள் மற்றும் அஞ்சல ஊழியர்கள் மூலம் விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE