இந்தியாவில் ‘அமேசான் ஏர்’ சரக்கு விமான சேவை தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இந்தியாவில் 'அமேசான் ஏர்’ (Amazon Air) சரக்கு விமான சேவையை தொடங்கியது அமேசான் நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களை டெலிவரி செய்யும் வகையில் இந்த சேவையை தொடங்கியுள்ளது.

இந்திய இ காமர்ஸ் சந்தையில் இந்தச் சேவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் நகரங்களுக்கான டெலிவரிகளை இது சுமந்து செல்லும்.

அமேசான் ஏர் சேவை வட அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு வெளியில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடந்தது. தெலங்கானா மாநில தொழில்துறை அமைச்சர் கேடி ராமா ராவ் இந்த சேவையை ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நிகழ்வில் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், அமேசான் ஏர் திட்டம் தொடங்கப்பட்டதால் நிறைய கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் தங்களின் படைப்புகளை, தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச இ வணிக தளத்திற்கு கொண்டு சேர்க்க முடியும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

மேலும், அமேசான் நிறுவனத்துடன் தெலங்கானா கைத்தறி வாரியம் பேசிவருவதாகவும், அதன் மூலம் மாநிலத்தின் 56 கிராமங்களைச் சேர்ந்த 4500 நெசவாளர்களின் தயாரிப்பு நேரடியாக இத்தளத்தின் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். அமேசான் ஏர் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை விரைவில் பெற முடியும் என்றும் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE