விடுப்பில் உள்ள ஊழியரை தொந்தரவு செய்தால் அபராதம்: ‘டிரீம் 11’ நிறுவனத்தின் புதிய விதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘டிரீம் 11’ நிறுவனம் அதன் ஊழியர்களின் விடுமுறை சார்ந்து கொண்டு வந்திருக்கும் புதிய விதி ஒன்று, கவனம் ஈர்த்து உள்ளது.

இந்தியாவில், விடுமுறை நாட்களில் கூட அலுவலக வேலை சார்ந்து ஊழியர்களை உயர் அதிகாரிகள் தொடர்பு கொள்வது சகஜம். இதனால், விடுமுறை நாளிலும் ஓய்வெடுக்க முடியாமல், வேலை குறித்து சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஊழியர்கள் தள்ளப்படுகின்றனர். இது தீவிர மன அழுத்தத்துக்குத் அவர்களைத் தள்ளிவிடுகிறது. இந்நிலையில், டிரீம் 11 நிறுவனம் ஊழியர்களின் விடுமுறை தொடர்பாக புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, ஒரு ஊழியர் விடுமுறையில் இருக்கும் போது அவரை வேலை சம்பந்தமாக சக ஊழியர்கள் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, போன் அழைப்பு என எந்த வழியிலும் ஊழியரை தொந்தரவு செய்யக் கூடாது. இதை மீறி செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டிரீம் 11 நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் சேத் கூறுகையில், “நாங்கள் ‘டிரீம் 11 அன்பிளக்’ என்ற கொள்கையை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 7 நாட்கள் தொடர் விடுமுறை உண்டு. இந்த விடுமுறையை எங்கள் ஊழியர்கள் எந்த இடையூறும் இல்லாமல், நிம்மதியாக செலவிட வேண்டும் என்று விரும்புகிறோம். இதனால், இந்த விடுமுறை நாட்களில் அலுவலக வேலை சார்ந்து ஒரு ஊழியரை மற்றொரு ஊழியர் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவித்துள்ளோம். மீறி தொடர்பு கொள்பவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்தப் புதிய விதி நல்ல பலனளிக்கிறது” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE