வருமான வரி செலுத்தாதவர்களின் சொத்துகள் ஏலம் விடப்படும்: முதன்மை தலைமை ஆணையர் கடும் எச்சரிக்கை

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: "வருமான வரி செலுத்தாதோரை அடையாளம் கண்டு அவர்கள் சொத்துகளை ஏலம்விட்டு வசூல் செய்ய முடிவு செய்துள்ளோம்" என்று வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வருமான வரி செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுடனான வருமான வரித் துறை அதிகாரிகள் சந்திப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை மதுரை தனியார் ஹோட்டலில் நடந்தது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். மதுரை மண்டல தலைமை ஆணையர் சீமா ராஜ், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் எம்.ரத்தினசாமி மற்றும் அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு பின் வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாடு, புதுச்சேரியில் வருமான வரித் துறையில் வசூலாகும் வருமான வரி பற்றி ஆய்வு செய்வதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. மதுரை மண்டலத்தில் ஆய்வு செய்ததில் ரூ.4 ஆயிரம் கோடி வருமான வரி வசூலாக வேண்டிய இடத்தில் இதுவரை ரூ.2,100 கோடி வருவாய் வந்துள்ளது. இந்த வருவாய் சுமாராகதான் வசூலாகியுள்ளது.

அடுத்த காலாண்டில் இந்த வரி வசூல் அதிகமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், யாரெல்லாம் அதிகமான வருவமான வரி கட்டுகிறோர்களோ அவர்களை அழைத்து, அவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் உள்ள சிரமங்கள், அவர்களுடைய கோரிக்கைகளை கேட்கவே, இந்தக் கூட்டம் நடத்தினோம்.

புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய இரு மண்டங்களில் மொத்தம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் வரிமான வரி இலக்கு நிர்ணயித்து இருந்தோம். தற்போது அதில் 70 சதவீதம் வசூல் செய்துவிட்டோம். கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது 28 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளோம். அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது வருமான வரி வசூலில் தமிழ்நாடு வருவாய் சிறப்பாகவே உள்ளது.

கடந்த ஆண்டில்தான் முதல் முறையாக ஒரு லட்சம் கோடி என்ற இலக்கை நிர்ணயம் செய்தோம். நிறைய பேர் ஆர்வமாக முன்வந்து வரி கட்டுகிறார்கள். இதவரை தமிழகத்தில் 67 லட்சம் பேர் வரி கட்டுகிறார்கள். மதுரை மண்டலத்தில் மட்டும் 9 லட்சம் பேர் வருமான வரி கட்டுகிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் பேர் புதிதாக வரி கட்டுகிறவர்களாக வருகிறார்கள். இந்த எண்ணிக்கை அகில இந்திய அளவிலும் அதிகமாகியுள்ளது. அதனால், வருமான வரி கட்டும் விழிப்புணர்வை மேலும் அதிகமாக்கவே இதுபோன்ற கருத்தரங்கை முயற்சியாக கொண்டுள்ளோம்.

வருமான வரி கட்டுவதில் நிறைய மாற்றம் வந்துள்ளது. அதை எப்படி செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் பொதுமக்கள், தனியார் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு செய்கிறார்கள். டிரஸ்ட் வரி விலக்கு கொடுப்பது பற்றியும் விழிப்புணர்வு செய்கிறோம். அதனால், இதுபோன்ற கருத்தரங்கு வரி கட்டுகிறவர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. வருமான வரி கட்டுவோர்கள் கோரிக்கைகளுக்கு 30 நாளில் தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம்.

வரி கட்டாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். வரி கட்டாதவர்கள் சொத்துகளை அடையாளம் கண்டு அதனை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம். அவர்கள் பற்றிய டேட்டா பேஸ் விவரங்களை வைத்து அவர்கள் எங்கெல்லாம் சொத்தகளை வைத்துள்ளார்கள் என்று கண்டறிந்து அதனை ஏலம் விடப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE