பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

By ப.முரளிதரன்

சென்னை: ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தால், தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த டிசம்பர் 29-ம் தேதி இது அமலுக்கு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் வளர்ந்த நாட்டுடன் இந்தியா மேற்கொண்டுள்ள முதல் வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும்.

இதன்மூலம் இரு நாடுகள் இடையே 90 சதவீதம் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (ஃபியோ) தென்மண்டல இணை இயக்குநர் ஜெனரல் கே.உன்னிகிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவுடன் அதிக வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் 17-வது நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ல் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 27.5 பில்லியன் டாலருக்கு இருதரப்பு வர்த்தகம் நடைபெற்றது.

தற்போது இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்கள், வாகனங்கள், அணிகலன்கள், விவசாயப் பொருட்கள், ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து கற்கள், நகைகள், தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் இயந்திரங்கள், தோல் அல்லாத காலணிகள் ஏற்றுமதி அதிகரிக்கும். கடந்த 2021-22 நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 384 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 322 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றது. இந்த நிதியாண்டு இறுதிக்குள் இது 500 மில்லியன் டாலர் அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், இந்த ஏற்றுமதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் குறித்து ஏற்றுமதியாளர்கள் கூறும்போது, “இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை வரவேற்கிறோம். இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகள் இடையே வர்த்தகம் அதிகரிப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE