புத்தாண்டு முதல் அதிகரிக்கிறது பைக், கார்களின் விலை!

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்வரும் புத்தாண்டுக்கு புதிய மோட்டார் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் முந்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனெனில் புது வருட பிறப்பிற்கு பிறகு தற்போது உள்ள விலையை காட்டிலும் 1 முதல் 3 சதவீதம் வரை கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலை கூட வாய்ப்புள்ளதாக தகவல்.

இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் தொடங்கி சொகுசு கார்களை விற்பனை செய்து வரும் மெர்சிடிஸ் பென்ஸ், Audi போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அடுத்த மாதம் விலை ஏற்றம் குறித்த அறிவிப்புகளை பகிர்ந்துள்ளன. இதற்கு வழக்கம் போலவே அதிகரித்து வரும் உற்பத்தி செலவை அனைத்து நிறுவனங்களும் காரணமாக சொல்லி உள்ளன. இது தவிர கூடுதலாக செமி கண்டக்டர் சிப் தட்டுப்பாடும் மற்றொரு காரணமாக உள்ளது. கார்களின் மாடலை பொறுத்து விலை ஏற்றம் இருக்கும் என தெரிகிறது. இதனை அனைத்து நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

ஏப்ரல் மாதம் அமலாக உள்ள எமிஷன் விதிமுறைகளுக்கு இணங்க கார்களை தயாரிப்பதால் ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதனை துறை சார்ந்த வல்லுநர்களும் உறுதி செய்துள்ளனர். இந்த விதி இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிகிறது.

இந்த கடுமையான எமிஷன் விதிமுறைகள் காரணமாக சில பிரபலமான கார் மாடல்களின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல். ஏனெனில் அதற்கு தகுந்த வகையில் எஞ்சினில் மாற்றம் மேற்கொள்ள வேண்டி உள்ளதாம். அதை செய்தால் அந்த கார்களின் விலை தாறுமாறாக கூடி விடுமாம்.

கடந்த 1-ம் தேதி ஹீரோ மோட்டோகாரப் நிறுவனம் ஸ்கூட்டர், பைக் என தங்கள் நிறுவன தயாரிப்புகளின் வாகன விலையை உயர்த்தியது. இந்த புதிய விலை உயர்வு அதிகபட்சம் ரூ.1500 வரையில் இருக்கும் என தெரிவித்தது. மாடல் ரேஞ்ஜை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது. மற்ற இருசக்கர உற்பத்தி நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைகளுக்கு மத்தியில் மோட்டார் வாகனங்களின் விலை உயர்வு வாகன விரும்பிகளுக்கு சங்கடமே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE