பங்குச்சந்தை மீண்டும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 635 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புதன்கிழமை மீண்டும் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 635 புள்ளிகள் (1.03 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 61,067 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 186 புள்ளிகள் (1.01 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 18,199 ஆக இருந்தது.

புதன்கிழமை காலை வர்த்தகம் 250 புள்ளிகள் உயர்வுடனேயே தொடங்கியது. காலை 09:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 129.63 புள்ளிகள் உயர்வுடன் 61,831.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 79.25 புள்ளிகள் உயர்வுடன் 18,464.55 ஆக இருந்தது.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் கரோனா பரவல், அதுகுறித்த இந்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அமெரிக்காவில் நிலவி வரும் மந்தநிலை குறித்த அச்சம் போன்ற காரணிகள் இந்திய பங்குச்சந்தைகளை வெகுவாக பாதித்தன. இதனால் காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் தொடர்ந்து சரிவினை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. வர்த்தக நேரத்தின்போது 1,050 புள்ளிகள் வரை கடுமையாக வீழ்ச்சி அடைந்து பின்னர் மீண்டு 635 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 635.05 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,067.24 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 186.20 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,199.10 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, விப்ரோ பங்குகள் ஏற்றம் கண்டிந்தன. ஹிந்துஸ்தான யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE