சென்னை: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மறு வடிவமைப்பு, மறு உருவாக்கம் செய்யப்பட்ட முற்றிலும் புதிய பல்சர் பி150 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகளவில் மிகவும் மதிப்பு வாய்ந்த இருசக்கர, 3 சக்கர வாகனங்கள் உற்பத்தி நிறுவனமான பஜாஜ் முற்றிலும் புதிய பல்சர் பி150 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே இதுபோல 250சிசி வாகனங்கள் (என்250, எஃப்250) மற்றும் 160சிசி வாகனத்தை (என்160) மறு உருவாக்கம் செய்துள்ளது. தற்போது 150சிசி பைக்கை மறு உருவாக்கம் செய்து கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘பல்சர் ரஷ்’ என்ற அடையாளத்தை கணிசமாக மேம்படுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட பவர் டெலிவரி, ஸ்போர்டியர் டிசைன் மற்றும் குறைக்கப்பட்ட எடை ஆகிய அம்சங்களுடன் புதிய பல்சர் பி150 வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய பல்சர் பி150-ல் முப்பரிமாண முன்பக்க வடிவமைப்பு, இரட்டை மற்றும் ஒற்றை டிஸ்க் பிரேக், ஸ்பிளிட் சீட், 790மிமீ உயர சீட் உள்ளன. மோனோ ஷாக் ரியர் சஸ்பென்ஷன் மற்றும் இன்ஜினுக்கு கீழே சிறந்த நிலைப்புத் திறனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்ட புகைபோக்கி ஆகியவை உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக இதன் மொத்த எடை 10 கிலோ வரை (அதாவது 11 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 149.68சிசி திறன் கொண்ட சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக் 14.5 பி.எஸ். @8500 ஆர்.பி.எம். என்ற உச்சபட்ச திறனை வெளிப்படுத்தும்.
புதிய பல்சர் பி150 குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவன செயல் இயக்குநர் ராகேஷ் சர்மா கூறும்போது, “சாலை போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்சர் 150 அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் புதிய வடிவமைப்புடன் இந்த பைக் மறு உருவாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. 5 வண்ணங்களில் கிடைக்கும் இதன் விலை சுமார் ரூ.1.20 லட்சம் வரை இருக்கும்” என்றார்.