வருமான வரி தாக்கல் செய்ய ஒரே படிவம் வெளியிட முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்காக ஒரே படிவம் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக தற்போது பல்வேறு படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து ஒரே படிவம் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாதிரி ஒருங்கிணைந்த படிவத்தை வருமான வரித் துறை, கடந்த 1-ம் தேதி வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

இதில், ஐடிஆர்-7 படிவத்தைத் தவிர இதர படிவங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஐடிஆர்-1 மற்றும் 4 படிவங்கள் ஏற்கெனவே எளிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், அவை அப்படியே தொடரப்படும்.

உதாரணமாக, ஒருவர் சம்பளதாரராக இருந்து சிறிது வட்டியும், ஈவுத் தொகையும் வருவாயாக பெற்றுக்கொண்டு ஒரு வீட்டை மட்டும் சொந்தமாக வைத்திருந்து ஆண்டு மொத்தவருவாய் ரூ.50 லட்சத்துக்குள் இருந்தால், அவர் ஐடிஆர்-1 படிவம் பயன்படுத்தினால் போதும். ஒருங்கிணைந்த படிவத்தை பயன்படுத்த வேண்டியதில்லை.

இதேபோல, ஒருவர் சுயதொழில் செய்பவராக இருந்தால், விற்றுமுதல் ஆண்டொன்றுக்கு ரூ.50 லட்சத்துக்குள் இருந்தாலோ, சிறுதொழில் செய்து ஆண்டொன்றுக்கு விற்றுமுதல் ரூ.2 கோடிக்குள் இருந்தாலோ அவர்கள் ஐடிஆர் படிவம்-4ஐ பயன்படுத்தினால் போதும். ஒருங்கிணைந்தபடிவம் பயன்படுத்த வேண்டியதில்லை. ஐடிஆர் 2, 3, 5 அல்லது6 ஆகிய படிவங்களை பயன்படுத்துவோர்தான் இனி ஒருங்கிணைந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE