சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து வெளியேறிவரும் சூழலில் விரைவில் ட்விட்டர் திவாலாகும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களைக் கொட்டிக் கொடுத்து பிரபலமான சோஷியல் மீடியா தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய முதல் நாளே ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த பராக் அக்ரவால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை பதவியை விட்டு நீக்கினார். அதனையடுத்து, நிறுவனத்தின் விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும் மனித வளப் பிரிவுகளில் அமர்ந்திருப்பவர்கள் உட்பட மற்றவர்கள் கடந்த வாரம் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், ட்விட்டர் திவாலாக வாய்ப்புள்ளதாக அவர் தொலைபேசி உரையாடலில் சில ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, யேல் ரோத், ராபின் வீலர் ஆகிய இரண்டு உயர் அதிகாரிகள் விளம்பரதாரர்கள் பிரச்சினை குறித்து மஸ்குடன் ட்விட்டர் ஸ்பேசஸ் சேட்டில் உரையாடியுள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தை ஏதும் ஆக்கபூர்வமாக இல்லாத நிலையில் அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் இருவரும் கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அதேபோல் வியாழக்கிழமை ட்விட்டரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லீ கிஸ்னர் பதவி விலகினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அறிவிப்பை வெளியிட்டு பதவி விலகினார். ட்விட்டரின் தலைமை பாதுகாப்பு அலுவலர் டேமியன் கீரன், தலைமை கம்ப்ளையன்ஸ் அலுவலர் மேரியான் ஃபோகார்டி ஆகியோரும் பதவி விலகியுள்ளனர்.
அமெரிக்க ஃபெடரல் வர்த்தக கமிஷனானது (FTC), ட்விட்டரின் போக்கை ஆழ்ந்த அக்கறையுடன் உற்று கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ட்விட்டரின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் இணக்கம் அதிகாரி ராஜினாமா ட்விட்டர் ஒழுங்குமுறை ஒப்பந்தங்களை மீறிய ஆபத்தில் தள்ளியுள்ளது என்று தெரிவித்துள்ளது. எஃப்டிசியின் இயக்குநர் டக்ளஸ் ஃபரார் அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் ட்விட்டரில் நடைபெறும் மாற்றங்களை கண்காணிக்கிறோம். எந்த ஒரு சிஇஓவும் நிறுவனமும் சட்டத்தை விட உயர்ந்தது அல்ல. எல்லா நிறுவனங்களும் சட்டங்களை பின்பற்ற வேண்டும். அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்" என்றார்.
இந்நிலையில், வியாழனன்று ட்விட்டர் ஊழியர்களை நேரில் சந்தித்த எலான் மஸ்க், நிறுவனம் அடுத்த ஆண்டில் பில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்கலாம் என்றார். 2021-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ட்விட்டர் நிர்வாகம் 66 மில்லியன்கள் மட்டுமே நஷ்டமடைந்த நிலையில், நடப்பு ஆண்டில் ஜூன் 30-ம் தேதி வெளியான இரண்டாவது காலாண்டு அறிக்கையில் 270 மில்லியன் டாலர்கள் நிகர இழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், ட்விட்டர் நிதி இழப்பை காரணம் காட்டி வேறு வழியே இல்லாததால் தவிர்க்க முடியாமல் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.