‘வேலையை விடுவது குறித்து சில காலமாக யோசித்து வந்தாலும், வேலையை விட மாட்டேன் என மனைவியிடம் சொல்லிவிட்டுதான் அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால் அன்றைய தினமே வேலையை விட்டு நின்றதுடன், அலுவலக காரை அங்கேயே விட்டுவிட்டு நண்பரின் டூவீலரில் வீட்டுக்கு வந்தேன்’ என ரஜினி பட கதை போல தன் வாழ்க்கையை சொல்லத் தொடங்கினார் கிரீஷ் மாத்ருபூதம். அவரது பிரஷ்டெஸ்க் அலுவலகம் முழுவதும் ரஜினியே நிரம்பி வழிகிறார். சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம். 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல ஸ்டார்ட் அப் விருதுகளை வாங்கி இருக்கிறது.
திருச்சியில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சராசரிக்கு மேலான படிப்பு கொண்ட மாணவர். சாஸ்த்ரா கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தார். வேலை கிடைக்கவில்லை. உடனடியாக எம்பிஏ படித்தார். அங்கு புராஜெக்ட் செய்த நிறுவனத்திலேயே 12,000 ரூபாய்க்கு வேலை கிடைத்தது. ஆனால் ஒட்டு மொத்த ஐடி துறையும் வளர்ந்து வருகிறது என்பதால் அந்த துறையில் ரூ.5,000-க்கு வேலைக்கு சேர்ந்தார். வளர்ந்து வரும் துறையில் நிறைய வாய்ப்புகள் உருவாகும் என்பதால் அங்கு சேர்ந்தேன் என்று கூறும் கிரிஷிடம் உரையாடியதிலிருந்து…
நீங்கள் படித்தது எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், அடுத்து எம்பிஏ. ஆனால் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது எப்படி?
என்னுடைய அறை நண்பர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள். அப்போது ஆறு மாத அவகாசம் கிடைத்ததால் ஜாவா கோர்ஸில் சேர்ந்தேன். அதைக் கற்றுக் கொண்டு நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுத்தேன். அதன் பிறகு கட்டணம் கொடுத்து படிக்கும் ஜாவா சென்டராக வளர்ந்தது. எக்ஸ்பர்ட் லேப்ஸ் என்னும் பெயரில் சிறிய நிறுவனமாகவே ஒருவருடத்துக்கு மேல் அதனை செய்தேன். பிறகு அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து சென்றுவிட்டேன். நான் மற்றவர் களுக்கு சொல்ல விரும்புவது இதுதான். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நெருக்கடியான, சோர்வான காலம் இருக்கும். அந்த காலத்தில் நீங்கள் என்ன கற்றுக் கொள்கிறீர்களோ அது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அமெரிக்காவில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்துக்கு பிறகு சிறிய நிறுவனமான ஜோகோவிற்கு எப்படி வந்தீர்கள்?
அமெரிக்காவில் முதலில் பணியாற்றிய பெரிய நிறுவனத்தில் வழக்கமான வேலை அனுபவம்தான். அதை தாண்டி செய்வதற்கு ஒன்றும் இல்லை. அதனால் மீண்டும் டிரெயினிங் சென்டர் ஆரம்பிக்கலாம் என்று இந்தியாவுக்கு வந்தேன். ஆனால் டாட் காம் பிரச்சினைக்கு பிறகு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்கே அப்போது (2001-ம் ஆண்டு) யாருக்கும் விருப்பம் இல்லை. தவிர அப்போது ஸ்டார்ட் அப் என்று சொன்னால் ஏதோ பெட்டிக்கடை என்னும் மனநிலைதான் இருந்தது என்பதால் 5 மாதங்களில் அதனை மூடிவிட்டேன். அதன் பிறகும் வேலைக்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். ஆனால் நான்கு வருட அனுபவம் இருந்தாலும் எனக்கு வேலை கிடைப்பது மிக சிரமமாக இருந் தது. பிறகு தெரிந்த நண்பர் மூலமாக ஜோகோவில் சேர்ந்தேன். நான் சேரும் போது ஜோகோ சிறிய நிறுவனம் அல்ல. என்னுடைய ஐடி எண் 352.
எந்த நொடியில் ஜோகோ வேலையை விட முடிவு செய்தீர்கள்?
ஜோகோவில் நான் மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தேன். அங்கு வேகமாக வளர்ந்தேன். 2007-ம் ஆண்டு அமெரி க்காவுக்கு சென்றேன். இரு வருடத்தில் அங்கு இருக்க பிடிக்காததால் தலைமையிடம் பேசி இந்தியாவுக்கு வந்தேன். இந்த சமயத்தில் நிறுவனம் வளர்ந்துவிட்டது. நான் நிர்வாக ரீதியிலான பணிகள் மட்டுமே செய்யும் சூழல் இருந்தது. இது எனக்கு பிடிக்கவில்லை. தவிர கஸ்டமர் சப்போர்ட் தொடர்பாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. வேலையை விட முடிவு செய்தேன். இத்தனைக்கும் சில மாதங்கள் முன்புதான் கடன் வாங்கி வீடு வாங்கி இருந்தேன். 50,000 இஎம்ஐ கட்ட வேண்டிய சூழலில் இருந்தேன். ஆனாலும் கொஞ்சம் சேமிப்பு, நண்பர்களின் முதலீடு மூலம் நிறுவனத்தை தொடங்கினேன். அதன் பிறகு 9 மாதங்களில் வென்ச்சர் கேபிடல் முதலீடு கிடைத்தது என்பதால் பிரச்சினையில்லை.
ஜோகோ நிறுவனம் வென்ச்சர் கேபிடல் முதலீட்டை தவிர்க்கும். ஆனால் அங்கிருந்து வந்த நீங்கள் வென்ச்சர் கேபிடல் முதலீடு மூலமாகவே நிறுவனத்தை வளர்த்தது எப்படி?
ஜோகோ நிறுவனத்தின் பிஸினஸ் மாடல் வேறு. எங்களுடைய மாடல் வேறு. உதாரணத்துக்கு ஒரு வாடிக்கை யாளரை ஈர்க்க 300 டாலர் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் அவர் மூலம் எனக்கு மாதம் 30 டாலர்தான் கிடைக்கும். ஒரு வாடிக்கையாளர் மூலம் லாபம் ஈட்ட பத்து மாதம் ஆகும் என்பதால் அதிக முதலீடு இல்லாமல் அதிக வாடிக்கையாளர்களை பெற முடியாது. முதலீடு இல்லை எனும் பட்சத்தில் மெதுவாக வளரலாம். ஆனால், 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் எனக்காக 5 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க தயாராக இருந்தார். இந்த வேகத்தில் வளர்ந்தால் நிறுவனமும் வளர முடியாது. குழுவையும் தக்க வைக்க முடியாது என்பதால்தான் வென்ச்சர் கேபிடல் முதலீட்டை பெற்றோம். வென்ச்சர் கேபிடல் முதலீடு என்பது ராக்கெட் போல, ஒன்று மேலே செல்லும். இல்லை கடலில் விழும், இதை என் குழுவிடம் விளக்கிய பிறகுதான் வென்ச்சர் கேபிடல் முதலீட்டை பெற்றோம். எங்கள் விஷயத்தில் ராக்கெட் மேலே சென்றுவிட்டது.
இந்தியாவில் கூகுள் கேபிடல் முதலீடு செய்த முதல் நிறுவனம் உங்களுடையது. எப்படி நடந்தது?
வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்ய கூகுள் திட்டமிட்டிருந்தது. அப்போது எங்களின் ரேட்டிங்கை பார்த்து எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புவதாக அங்கிருந்து மெயில் வந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நாங்கள் நிதி திரட்டி இருந்தோம். மற்ற நிறுவனங்கள் கேட்டால் மறுத்திருப்பேன். கூகுள் என்பதால் நான் சந்திக்கிறேன் என்று மெயில் செய்தேன். அதன் பிறகு முதலீடு வந்தது.
மிக விரைவாக 6 நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறீர்கள். என்ன காரணம்?
பொதுவாக மூன்று விஷயங்களுக் காக கையகப்படுத்துதல் நடக்கிறது. பணியாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் வருமானம். வருமானத்துக்கான நாங்கள் கையகப்படுத்தவில்லை. நாங்கள் கையகப்படுத்திய நிறுவனங்கள் மிகச் சிறியவை. நாங்கள் கையகப்படுத்தியது பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்காக மட்டுமே. அதை நாங்களே செய்வதற்கு காலதாமதம் ஏற்படும். தவிர ஆறு நிறுவனங்களை கையகப்படுத்தியது தெரியுமே தவிர 50 நிறுவனங்களை நிராகரித்தது யாருக்கும் தெரியாதே.
எப்போது பிரேக் ஈவன்?
லாபம் ஈட்டுவது எளிது. ஆனால் இப்போதைக்கு வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். மற்ற நிறுவனங்கள் போல அதிக செலவு எங்களுக்கு கிடையாது.
உங்களுடைய புராடக்டுகள் அனைத்தும் பி2பி-ஆக இருக்கிறது. நேரடியாக வாடிக்கையாளர்களுக்கான புராடக்டுகள் உருவாக்கும் திட்டம் இல்லையா?
ஒரு துணிக்கடை வைத்திருப்பவரை பார்த்து ஏன் நகைக்கடை ஆரம்பிக்கவில்லை என்று கேட்பது போல இருக்கிறது. எனக்கு தெரிந்ததைத் தான் செய்ய முடியும். வெளியில் இருந்து பார்க்கும் போது அனைத்தும் தொழில் நுட்பம் சார்ந்தவையாக தெரிந்தாலும் இவை இரண்டும் வேறு.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago