சொத்து முக்கியம் இல்லை; தொழில் செய்வது தான் முக்கியம்!- ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே. ஆர். நாகராஜன்

By இரா.கார்த்திகேயன்

ரூபாய் நோட்டு பிரச்சினையில் திருப்பூர் ஆயத்த ஆடை தொழில்துறை சிக்கித் தவிக்கிறது. வாரச் சம்பளம் பெறும் வடமாநிலத் தொழிலாளர்கள் பலர், பணத்தை மாற்ற போதிய ஆவணங்கள் இல்லாததால், சொந்த ஊர்களுக்கே பயணிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்கள் செய்வதறி யாது குடும்பத்துடன் தவித்து வருகின்ற னர். ஆயத்த ஆடை நிறுவனங்கள் வரும் டிசம்பர் இறுதிவரை தொழிலாளர் களுக்கு பழைய நோட்டுகளை விநியோ கிக்க திட்டமிட்டிருப்பதாக, நிறுவனங் களில் எட்டும் தகவல்களால் தொழிலாளர் கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில், “மத்திய அரசின் அறிவிப்பு எங்களை இம்மியளவும் பாதிக்கவில்லை. எங்கள் நிறுவனத்தில் இருப்பவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே, வங்கி வரம்புக்குள் கொண்டு வந்துவிட்டோம்” என பூரிப்புடன், பேசுகிறார் திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன்.

இது தொடர்பாக அவர் மேலும், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

10-ம் வகுப்பு முடித்துவிட்டு, திருப்பூர் விஜயலெட்சுமி கதர் கடையில் வேலை பார்த்தேன். அங்குதான், தொழில் சார்ந்த கல்லூரி படிப்பை படித்தேன் என்றே சொல்லலாம். கடையில் வேலை பார்த்தபோதே, ஊருக்கே ஆடை தயா ரித்துதரும் நெசவாளர்கள் வெற்றுடம் புடன், கடைகளின் ஓரம் காத்திருந்த காட்சி என்றைக்கும் மறக்கமுடியாது. நெசவாளர் குடும்பங்களில் 3 நேர சாப்பாட்டுக்கு வழி இருக்காது. இரவு மட்டும் தான் சமைத்து சாப்பிடுவார்கள். அந்த மாதிரி தருணத்தில் தான் நான் புதிதாக வேஷ்டி தயாரிக்கலாம் என முடிவெடுத்தேன். என்னை சுற்றியிருந்த அனைவரும், ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டு வளர ஆரம்பித்த நேரத்தில், நான் வேஷ்டி தொழிலில் ஈடுபட்டேன். அதற்கு, மிக முக்கியக் காரணம் நெசவாளர்களின் வாழ்வு. அவர்களது வாழ்வை மேம்படுத்த வேண்டும் எனும் விஷயம், வாழ்க்கையில் வைராக்கியமாக மாறியது.

1983-ம் ஆண்டு வேஷ்டி தொழில் ஆரம்பித்தேன். கோவை வடவள்ளி தொடங்கி திருப்பூர், சேலம் தொட்டு தர்மபுரி எல்லை வரை 10 ஆயிரம் தறி குடும்பங்கள் ராம்ராஜூக்கு இன்றைக்கு உள்ளது. அவர்களது வாழ்வை மெள்ள மெள்ள மாற்றியுள்ளோம்.

நெசவாளர்களுக்கு வகுப்புகள் எடுத்துதான் வங்கியில் கணக்கு தொடங்கினோம். வங்கியில் கணக்கு வைத்திருப்பதால் கடனுதவி கிடைக் கும் என அறிவுறுத்தினோம். அதில், பல பிரச்சினைகள் இருந்தது. நெசவாளர் பலருக்கும் கையெழுத்து போடத் தெரியாது. இந்தநிலையில் தான், பல சிரமங்களை கடந்து 2005-ம் ஆண்டு வங்கி கணக்கு தொடங்க ஆரம்பித்தோம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் போல, தொழில் செய்ய அரசும் அவசியம் என உணர்ந்ததால், தொழிலாளர் களுக்கும் ஆர்சி, டின் நம்பர் மற்றும் வங்கிகணக்கை ஆரம்பித்து அவர்களுக்கு ஏடிஎம் கார்டு பெற்று தந்தோம். நிர்வாக ரீதியாக தொழில் செய்ய எளிமையாக இருக்கும் என, வங்கியில் கணக்கு தொடங்கினோம். ஒரேநாளில் இது சாத்தியமாகவில்லை. கிட்டத்தட்ட 5ஆண்டுகளுக்கு பின், அனைத்து தறி குடும்பங்களும் முறைப்படுத்தப்பட்டு, இன்றைக்கு அனைவருக்கும் மனமுவந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள். அனைவரும் உரிய பதிவுச்சான்றிதழ் (RC) பெற்று தொழில் செய்கிறார்கள். இன்றைக்கு நெசவாளர்களின் வாரிசுகள் நல்ல நிலையில் உள்ளனர்.

நவ.8- மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, எங்கள் தொழிலாளர்கள் இந்த அறிவிப்பால் ‘எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையென’ மற்ற ஊர்களில் பெருமிதமாக பேசுவதை பார்க்க முடிகிறது. நாம் சம்பாதித்ததை, நம் குடும்பத்துக்கு செலவு செய்ய அரசு சட்டம், இயற்ற தேவையில்லை. நாங்கள் வருமானம் மற்றும் விற்பனை வரியை முறையாக செலுத்துவதால், எங்கள் செயலை பாராட்டி, முறையாக வரி செலுத்தியமைக்காக நிதித்துறை அமைச்சகம் ‘பிளாட்டினம்’ சான்றிதழ் தற்போது எங்களுக்கு அனுப்பியுள்ளது. எங்களின் நேர்மைக்கு கிடைத்த நற்சான்றிதழ், அங்கீகாரம்.

வருமானவரியை நான் முறையாக செலுத்துவதை பார்த்த பலரும் பைத்திய காரத்தனம் என்றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் இன்றைக்கு நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 6ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வங்கியில் தான் சம்பளம் செலுத்துகிறோம். அனை வருக்கும் ஏடிஎம் கார்டு வழங்கியுள் ளோம். மதுரை, ஈரோட்டில் தயாரிப்பு இடங்களில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப் பட்டுள்ளது. இந்த வசதியை நிறுவனத் துக்கு வரும் நெசவாளர்களும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

நமக்கு சொத்து முக்கியம் இல்லை; தொழில் செய்வது தான் முக்கியம் என முடிவெடுத்தோம். தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அனைத்துவரிகளும் அரசுக்கு செலுத்தி னோம். அதேபோல், தொழிலாளர் களுக்கு இஎஸ்ஐ, பிஎப், கிராஜூவிட்டி வரை முறையாக செலுத்துகிறோம். இது தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

திருப்பூரில் ஆயத்த ஆடை நிறு வனங்களில் வேலை செய்யும் தொழி லாளர்கள் மாதத்தில் குறைந்தபட்சம் 3 நிறுவனங்களில் மாறி, மாறி வேலை பார்ப்பதால் நடைமுறை சிக்கல்களும் உண்டு. அவர்கள் எந்த நிறுவனத்துக்கு சென்றாலும், அவர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் தரும் வசதிகளை செய்துதர வேண்டும். ஆகவே அது முறைப்படுத் தப்பட வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வு உயர்ந்தால் தொழில் உயரும்.

எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ள கடைக்காரர்களிடம், காசோலை தான் வாங்குகிறோம். 2005-ம் ஆண்டுக்கு பிறகு, எங்களிடம் தொழில் செய்பவர்களிடம் நாங்கள் பணம் வாங்குவதை நிறுத்திவிட்டோம். அதேபோல் பிரத்யேக ஷோரூம்களில் ‘ஸ்வைப் இயந்திரம்’ இருப்பதால், பலரும் அதை பயன்படுத்தி வேஷ்டி, சட்டை வாங்கிக் கொள்கிறார்கள். வியாபாரத்தில் பெரிதாக சுணக்கம் இல்லை. உரிய ஆவணங்கள் மூலம் கணக்குகளை பாரமரிக்கிறோம். வரி கட்டுவதற்கு பெருமைப்பட வேண்டும்.

மனித ஆற்றல் இருந்தால்தான், தொழிலை நேர்த்தியாக செய்ய முடியும். தொழிலாளருடன் அவர்களது குடும்பங்களுக்கும் மனவளக்கலை பயிற்சி தருகிறோம். என்னிடம் மனவலிமை இருந்தால்தான், இதை சாத்தியமாக்க முடிந்தது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புக்கு: karthikeyan.r@thehindutamil.co.in



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்