36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் சாதனை: விண்வெளி வர்த்தக சந்தையில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன

By செய்திப்பிரிவு

இங்கிலாந்து நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை, இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் நேற்று அதிகாலை புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், உள்நாட்டு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகின்றன. இவ்வாறு வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) என்ற பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள ஒன்வெப் நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒவ்வொரு செயற்கைக்கோளும் சுமார் 150 கிலோ எடை கொண்டவை. 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை சுமார் 5,400 கிலோ.

எனவே, அதிக எடையை சுமந்து செல்லும் திறன்படைத்த, இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட்டில் இவற்றை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ராக்கெட்டை தற்போது எல்விஎம்-3 என இஸ்ரோ அழைக்கிறது. இந்த ராக்கெட்டில் 8,000 கிலோ எடை வரை செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்ல முடியும்.

திட்டமிட்டபடி நேற்று அதிகாலை 12.07 மணிக்கு ஜிஎஸ்எல்வி- எம்கே3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

இந்த செயற்கைக்கோள்கள் புவியிலிருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள கீழடுக்கு சுற்றுவட்டப் பாதையில், 87 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டும். சுற்றுவட்டப் பாதை இலக்கை அடைந்ததும், ஒவ்வொரு செயற்கைக்கோளும் ராக்கெட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, அதற்குரிய சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. நேற்று அதிகாலை 1.30 மணிக்குள் 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள், என்எஸ்ஐஎல் அதிகாரிகள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், ‘‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க பணி. ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட்டை வணிக ரீதியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு நிறைவேறி உள்ளது’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "ராக்கெட் ஏவுதளம் மற்றும் ராக்கெட்டுகள் இல்லாத நாடுகள், இந்தியா போன்ற நாடுகள் மூலம் தங்களது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மேலும், பல நாடுகள் இந்தியாவிடம் உதவிகேட்கத் தயாராக இருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில், 2-வது ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது இன்னும் 2 ஆண்டில் அந்த ஏவுதளம் செயல்பாட்டுக்கு வரும். சந்திரயான்-3, ககன்யான் என அடுத்தடுத்து 4 அல்லது 5 ராக்கெட்டுகள் விரைவில் ஏவப்படும். சந்திரயான்-3 ராக்கெட் வரும் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படுகிறது" என்றார்.

நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் துரைராஜ் கூறும்போது, ‘‘அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பும் ராக்கெட்டுகளின் தேவை அதிகரிக்கும். அதற்கு ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் பொருத்தமானதாக இருக்கும்’’ என்றார்.

இதற்கிடையில், ஒன்வெப் நிறுவனத்தின் மேலும் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை என்எஸ்ஐஎல் நிறுவனம் பெற்றள்ளது. இத்திட்டம் அடுத்தஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும்.

1999-ல் இஸ்ரோ முதல்முறையாக வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பியது. அதற்குப் பிறகு 345 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்தியமைக்காக, என்எஸ்ஐஎல், இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். உலகளாவிய வர்த்தக ராக்கெட் சந்தையில், இந்தியாவின் போட்டியை உள்நாட்டு ராக்கெட் ஜிஎஸ்எல்வி எம்கே-3 அதிகரித்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்