மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்

By ப.முரளிதரன்

சென்னை: மருத்துவக் காப்பீடு எடுத்தவர்கள் காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகையை எவ்வாறு பெறுவது என்பது குறித்து, காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் காப்பீடுகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால், காப்பீட்டு முகவர்களை (இன்சூரன்ஸ் ஏஜென்ட்) கண்டாலே பொதுமக்கள் ஓடி ஒளிந்த நிலை மாறி, தற்போது பொதுமக்களே காப்பீட்டு முகவர்களை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கரோனா பரவலுக்குப் பிறகு, மருத்துவக் காப்பீடுகளின் அவசியம் குறித்து பொதுமக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அதிகரித்து வரும் மருத்துவச் செலவை சமாளிக்க, அனைவரும் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பது அவசியமாகியுள்ளது.

அதேநேரம், மருத்துவக் காப்பீடு எடுக்கும்அனைவரும் அதை முழுமையாக பயன்படுத்துவது இல்லை. அவ்வாறு பயன்படுத்தாதகாப்பீடுதாரர்களுக்கு ‘நோ கிளெய்ம் போனஸ்’ என்ற சலுகையை காப்பீடு நிறுவனங்கள் வழங்குகின்றன.

ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல காப்பீடுதாரர்கள் இந்த சலுகையை பயன்படுத்தத் தெரியாமல் உள்ளனர்.

இதுகுறித்து பொதுத்துறை காப்பீடு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களும் முன்னெச்சரிக்கையாக மருத்துவக் காப்பீடு எடுக்கும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு உடல் நலத்துடன் இருப்பவர்கள் காப்பீடு எடுத்த ஒருசில ஆண்டுகள் வரை அதை பயன்படுத்தாமல் இருந்தால், அவர்களுக்கு ‘நோ கிளெய்ம் போனஸ்’ என்ற சலுகையை காப்பீடு நிறுவனங்கள் வழங்குகின்றன.

2 வகைகளில் சலுகை

பாலிசி கவரேஜ் தொகை அதிகரிப்பு அல்லது பாலிசி பிரீமியத்தில் தள்ளுபடி என 2 வகைகளில் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

உதாரணமாக, ஒருவர் ரூ.10 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுத்து முதல் ஆண்டில் இழப்பீடு எதுவும் கோரவில்லை என்றால், அவருக்கு காப்பீடு நிறுவனம் 2-ம் ஆண்டில் கவரேஜ் தொகையில் 5 சதவீதம் போனஸ் அளித்து ரூ.10.5 லட்சமாக அதிகரிக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் வரை அவர் எந்த இழப்பீடும் கோரவிட்டால், 11-வது ஆண்டில் 50 சதவீதம் போனஸ் என்ற அளவில் கவரேஜ் தொகையை ரூ.15 லட்சமாக உயர்த்தும்.

அதேபோல, காப்பீடு எடுத்த முதல் ஆண்டில் இழப்பீடு தொகை பெற்றிருந்தால் 2-ம் ஆண்டில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ கிடைக்காது. 3-வது ஆண்டில் இழப்பீடு தொகை பெறவில்லை என்றால் 4-வது ஆண்டில் ‘நோ கிளெய்ம் போனஸாக’ கவரேஜ் தொகை 5 சதவீதம் உயர்த்தப்படும்.

இதேபோல, பாலிசி பிரீமியத்திலும் தள்ளுபடி பெறலாம். ரூ.10 லட்சம் கவரேஜ் கொண்ட பாலிசிக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் பிரீமியம் கட்ட வேண்டும். முதல் ஆண்டில் இழப்பீடு எதுவும் பெறாவிட்டால், ‘நோ கிளெய்ம் போனஸ்’மூலம் பிரீமியம் செலுத்துவதில் 5 சதவீத சலுகை வழங்கப்படும். அதாவது, 2-ம் ஆண்டில் பிரீமியம் தொகை ரூ.20 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.19 ஆயிரம் கட்டினால் போதும்.

50% வரை தள்ளுபடி

இவ்வாறு அதிகபட்சமாக 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதாவது, ரூ.20 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் பிரீமியம் கட்டினால் போதும்.

மேலும், ஒரு காப்பீடு நிறுவனத்தில் இருந்து வேறொரு காப்பீடு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றினாலும் (போர்ட்டபிளிட்டி) ‘நோ கிளெய்ம்’ சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன், அதே நிறுவனத்தில் வேறொரு மருத்துவக் காப்பீடு எடுத்தாலும், வேறு நிறுவனத்தில் எடுத்தாலும் இந்த சலுகையை பெறலாம். எனவே, மருத்துவக் காப்பீடு எடுத்தவர்கள் இழப்பீடு கோராத நிலையில், இந்த ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெரும்பாலும் காப்பீடு நிறுவனங்கள் தாமாகவே இந்த சலுகையை வழங்கிவிடுகின்றன. ஒருவேளை, தவறினாலும், காப்பீடுதாரர்கள் இதை தெரிவித்து சலுகையைப் பெற முழு உரிமை உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். கவரேஜ் தொகை அதிகரிப்பு அல்லது பாலிசி பிரீமியத்தில் தள்ளுபடி என 2 வகையில் சலுகை வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE