பங்குச் சந்தை சரிவு எதிரொலி - ஒரே நாளில் அதானிக்கு ரூ.29,480 கோடி இழப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 5 நாட்களாக சரிவு காணப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்த நிலையில், கவுதம் அதானி 3.6 பில்லியன் டாலர் (ரூ.29,480 கோடி) இழப்பைச் சந்தித்தார்.

இதையடுத்து போர்ப்ஸ் இதழின் நிகழ்நேர உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், அதானி 138.4 பில்லியன் டாலர் (ரூ.11.33 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு 2-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு பின்நகர்ந்துள்ளார். நேற்றைய தினம் முகேஷ் அம்பானியும் இழப்பைச் சந்தித்தார். நேற்று 1.6 பில்லியன் டாலர் (ரூ.13,102 கோடி) இழப்பைச் சந்தித்த முகேஷ் அம்பானி 83.4 பில்லியன் டாலர் (ரூ.6.82 லட்சம் கோடி) சொத்துமதிப்பைக் கொண்டு போர்ப்ஸ் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.

போர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 259.8 பில்லியன் டாலர் (ரூ.21.27 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு எலான் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் 142 பில்லியன் டாலர் (ரூ.11.62 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு 2- வது இடத்திலும், 137.8 பில்லியன் டாலர் (ரூ.11.28 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 4-வது இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE