டாடா டியாகோ மின்சார கார் இந்தியாவில் அறிமுகம்: விலை & விவரம்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: இந்திய வாகன சந்தையில் டாடா நிறுவனம் டியாகோ மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை உட்பட முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வோம். இது அந்த நிறுவனத்தின் மூன்றாவது மின்சார மாடல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் தங்கள் நிறுவனம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். அண்மைய காலமாக மின்சார வாகன உற்பத்தியில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. நெக்ஸான் EV மற்றும் டிகோர் EV கார்களை தொடர்ந்து டியாகோ மின்சார கார் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினந்தோறும் அதிகரித்து வரும் வாகன எரிபொருளான பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக மின்சார வாகன பயன்பாட்டை நோக்கிய கவனம் அதிகரித்து வருகிறது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள மின்சார வாகனத்திற்கான சந்தை வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் அது சார்ந்த முதலீடு மற்றும் உற்பத்தியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

டியாகோ வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.49 லட்சம். இதன் டாப் மாடல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.79 லட்சம். இது அறிமுக விலை என்றும். முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கார் அறிமுக விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 10-ம் தேதி முதல் இந்த காருக்கான முன்பதிவு தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இந்த கார் டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது. இதில் முதல் 2 ஆயிரம் கார்கள் ஏற்கனவே டாடா மின்சார மாடல் காரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

19.2kWh மற்றும் 24kWh என இரண்டு விதமான பேட்டரி பேக்குகளில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் 24kWh பேட்டரியில் 3.3kW ஏசி மற்றும் 7.2kW ஏசி சார்ஜிங் ஆப்ஷன் உள்ளது. இந்த காரின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 ஆண்டுகள் உத்தரவாதம் உள்ளது. இதன் டாப் ரேஞ்ச் 315 கிலோமீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான டிரைவ் மோடுகளை இந்த கார் கொண்டுள்ளது. அதில் ஸ்போர்ட்ஸ் மோடில் 5.7 நொடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியுமாம். இதன் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளும் அசத்தலாக உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE