'மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது' - நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் நிலைமையை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறது என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "அமெரிக்க டாலர் மதிப்பு சரிவை ஒட்டி உலக நாணயங்களில் ஏதேனும் ஒன்று ஏற்றத்தாழ்வு மற்றும் நிலையற்றத்தன்மையை தாக்குப்பிடித்து சீராக இருக்கிறது என்றால் அது இந்திய நாணயம்" தான் என்றார்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சரிவைக் கண்டது. ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 90 காசுகள் குறைந்து, 80.86 ரூபாயாக சரிந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து, ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவைக் கண்டது.

இதற்கிடையில் ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது. 3.5 லட்சம் வீரர்களை களமிறக்கப் போவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு அமெரிக்க பங்குச்சந்தையைய்யும், செலாவணி சந்தையை ஆட்டம் காணச் செய்துள்ளது. இதனால் உலகளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆசிய சந்தைகளில் பல நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் பெரும் சரிவைக் கண்டுள்ளது. இந்நிலையில் மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு சீராகவே உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE