தொழில் முன்னோடிகள் : ஹென்றி ஃபோர்டு (1863 - 1947)

By எஸ்.எல்.வி மூர்த்தி

குறை சொல்லாதீர்கள்; தீர்வைக் கண்டுபிடியுங்கள்.

-ஹென்றி ஃபோர்டு

ஹென்றி ஃபோர்டு வித்தியாசமான ஏழு வயதுக் குழந்தை. அவன் வயதுச் சிறுவர், சிறுமிகள் பொம்மைகள், பந்துகள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது , ஹென்றி கையில் ஸ்க்ரூ டிரைவர், சுத்தியலோடு திரிவான். வாட்ச்சுகள் அவனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பன்னிரெண்டு வயதிலேயே பார்ட் பார்ட்டாகக் கழற்றி அசெம்பிள் பண்ண அவனுக்குத் தெரியும்.

ஹென்றி வசித்த மிச்சிகன் நகரத்துக்கு அருகே டெட்ராய்ட் என்னும் ஊர் இருந்தது. அங்கே ஹென்றி முதல் முறையாக ரயிலைப் பார்த்தான். இன்ஜின் டிரைவர் சின்னப் பையனுக்கு ரயில் எப்படி ஓடுகிறது என்று விளக்கினார். போக்குவரத்து வாகனங்களோடு ஹென்றிக்கு ஏற்படப்போகும் வாழ்நாள் பந்தத்துக்கு இது ஆரம்பப் புள்ளி என்று அப்போது யாருக்குத் தெரியும்?

பக்கத்துப் பண்ணைக்காரர் அறுவடை செய்யும் இயந்திரம் வைத்திருந்தார். அதை ஓட்டுவதற்கு அவருக்கு மெக்கானிக் கிடைக்கவில்லை. சிறுவன் ஹென்றியிடம் கேட்டார். தன்னைவிட நான்கடி உயரமாக இருந்த மெஷினைப் பார்த்தான். சில மணி நேரங்கள் முயற்சி செய்தான். அந்த இரும்புக் குதிரை அவன் சொன்னபடி கேட்டது. 83 மணி நேரங்கள் ஓட்டி, முழு அறுவடையையும் முடித்துக்கொடுத்தான்.

பதினேழு வயதில் ஹென்றி படிப்பை நிறுத்தினான். அப்பாவுக்கு விவசாயம் தொழில். பெரிய பண்ணை வைத்திருந்தார். வருங்காலப் பண்ணை முதலாளி படிக்காமல் மெக்கானிக்கல் மனதோடு திரிகிறானே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். இப்போது, மகன் திறமை கண்டு பிரமித்தார். அவன் எப்படியாவது பிழைத்துக்கொள்வான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

ஹென்றிக்கு இன்ஜின்கள் மேல் இருந்த காதல் வளர்ந்துகொண்டே வந்தது. நீராவி இயந்திரம் ஓடும்போது, மின்சாரப் பொறி வரும், இந்தப் பொறிதான் நீராவி சக்தியை உந்து சக்தியாக்குகிறது. ஹென்றிக்கு மின்சாரம் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆசை. தாமஸ் ஆல்வா எடிசனின் ’எடிசன் இல்லூமினேட்டிங் கம்பெனி ’ தெருவிளக்குகளை எரியவைக்கும் மின்சாரம் சப்ளை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய மின்நிலையத்தில் பணியாற்றிய பொறியாளர் ஷாக் அடித்து இறந்துபோனார். எப்படி, எங்கே ஷாக் அடிக்கும் என்று தெரியாத ரிஸ்க்கான வேலை. ஹென்றி உடனேயே அங்கே போனார். மின்சாரம் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க அவர் தயார். வேலைக்குச் சேர்ந்தார். விரைவில், கம்பெனியின் நம்பர் 1 மெக்கானிக் ஆனார்.

நீராவியைப்போல் எரிவாயுவால் இயங்கும் இயந்திரங்களும் நடைமுறைக்கு வந்துகொண்டிருந்தன. எரிவாயு இன்ஜின் தயாரிக்க ஹென்றிக்கு மகா ஆசை. அதற்கு ஏராளம் பணம் வேண்டும். ஹென்றியிடம் இல்லை. அதற்காக முயற்சியைக் கைவிட அவர் சாதாரண மனிதரா? எரிவாயு இன்ஜினில் எந்தெந்த பாகங்கள் இருக்கவேண்டும் என்று விலாவாரியான டிராயிங் போட்டார். மின்நிலையத்தில் உலோகத் தகடுகள், ரப்பர் டியூப்கள் குப்பையில் எறியப்படுவதைப் பார்த்தார். அவற்றை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வந்தார். சில பாகங்களைத் தானே உருவாக்கினார். இன்னும் பல, பக்கத்துப் பட்டறைகளில் தயாரித்தார். பல வாரங்கள் கடும் உழைப்பு. இன்ஜின் ரெடி. பார்க்கக் கரடுமுரடாக இருந்ததே தவிர, கச்சிதமாகச் செயலாற்றியது. ஹென்றி மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனார்.

குதிரை வண்டிகளும், ரெயில் வண்டிகளுமே அப்போது போக்குவரத்து சாதனங்கள். எரிவாயு இன்ஜினை அடிப்படையாக வைத்து, குதிரையில்லாத போக்குவரத்து வண்டியை உருவாக்கும் எண்ணம் ஹென்றி மனதில் பிறந்தது.

கம்பெனி வேலை முடிந்து வீடு திரும்பியவுடன், வெளி உலகை மறப்பார். கார், கார், கார் தான் உயிர்மூச்சு. ``நேரத்தை வீணடிக்கிறாய்.” என்று அப்பாவும், ``லைஃபை என்ஜாய் பண்ணத் தெரியாதவன்” என்று நண்பர்களும் கேலி செய்தார்கள். ஹென்றி காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. இன்று கைகொட்டிச் சிரிப்பவர்கள், தான் ஜெயிக்கும்போது கைதட்டிப் பாராட்டுவார்கள், கை கட்டி நிற்பார்கள் என்று அவருக்குத் தெரியும்.

1896. 33 வயது. ஹென்றியின் முதல் வெற்றி. பெட்ரோல் இன்ஜினோடு இரண்டு சைக்கிள்களை இணைத்து, “க்வாட்ரிசைக்கிள்” (Quadricycle) என்னும் நான்கு சக்கர வண்டியை உருவாக்கினார். அடுத்த இரண்டு வருடங்களில் மேம்படுத்தப்பட்ட மாடல்கள். 20 கிலோமீட்டர் வேகச் சோதனை ஓட்டங்கள் மக்களுக்கு ஹென்றியின் படைப்பில் நம்பிக்கையைத் தோற்றுவித்தன. எடிசன் கம்பெனி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர கார் தயாரிப்பில் இறங்கினார்.

1899. சொந்தச் சேமிப்பு, மர்ஃபி என்னும் தொழிலதிபரின் முதலீடு, பல நண்பர்கள், உறவினர்கள் பணம் என்னும் அஸ்திவாரங்களோடு ஹென்றியின் டெட்ராய்ட் மோட்டார் கம்பெனி பிறந்தது. தரமான உதிரி பாகங்கள், திறமையான தொழிலாளிகள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு. இந்த நடைமுறைப் பிரச்சினைகளால் இரண்டு ஆண்டுகளுக்குள் தொழிற்சாலையை மூடவேண்டிய கட்டாயம்.

தோல்விகளும், அவை தந்த வேதனையும் ஹென்றி நெஞ்சில் வைரம் பாய்ச்சின. 1901. ஹென்றி ஃபோர்டு கம்பெனி தொடங்கினார். முதலீடு செய்தவர்களின் தலையீட்டால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. ஒரே வருடத்தில் கம்பெனிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1903. 40 வயது. இரண்டு தோல்விகள். மூன்றாம் முறை, ஃபோர்டு மோட்டார் கம்பெனி தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் கார்கள் விலை 1,000 டாலருக்கும் அதிகம். பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் ஆடம்பர பொருளாக இருந்தன. ஹென்றியின் இலக்கு வித்தியாசமானது. “நவீனத் தொழில்நுட்ப உதவியோடு எளிய வடிவமைப்பு, உயர்தரமான மூலப்பொருட்கள், நல்ல சம்பளம் பெறும் ஒவ்வொரு மனிதனும் வாங்குவதற்கு ஏற்ப குறைவான விலை.” 500 டாலருக்குள் கார் விற்க முடிந்தால் மட்டுமே இது சாத்தியம். தயாரிப்புச் செலவே 500 டாலரைவிட அதிகம். அப்புறம் எப்படி 500 டாலருக்கு விற்பது?

உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதுதான் ஒரே வழி என்று தெரிந்தது. என்ன செய்யலாம்? மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று காட்டினார். அந்த நாட்களில் தொழிற்சாலைகளில் ஊழியர்கள் பல குழுக்களாகச் செயல்படுவார்கள். தொழிற்சாலையின் பல பகுதிகளில் வேறுபட்ட பாகங்கள் தயாரிக்கப்படும். இறுதியாக, இந்தப் பாகங்கள் ஒரு மையப்பகுதிக்குக் கொண்டுவரப்படும். அங்கே அவை காராக இணைக்கப்படும்.

ஹென்றி இந்த முறையைத் தலைகீழாக மாற்றினார். பாகங்கள் இருக்கும் மத்திய இடங்களுக்குத் தொழிலாளிகள் போவதற்குப் பதில், அந்த பாகங்கள் தொழிலாளிகள் இருக்கும் இடங்களுக்கு வரும்படியான அசெம்பிளி லைன் என்னும் புதிய தயாரிப்பு முறையை அறிமுகம் செய்தார். இதன்படி, தொழிலாளர்கள் வரிசையாக இருப்பார்கள். அவர்களுக்கு முன்னால் இருக்கும் பெல்ட்டில் பாகங்கள் நகர்ந்து வரும். காரின் சேஸிஸ் (Chassis) என்கிற அடித்தள அமைப்புச் சட்டம் முதல் தொழிலாளியிடம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அதில் பிரேக்கை மாட்டுவார். அடுத்தவர் கிளச்சைப் போடுவார். கடைசித் தொழிலாளியிடம் வரும்போது முழுக்காரும் தயாராகிவிடும்.

இந்த புரட்சிகரமான உற்பத்தி முறையால், மற்றவர்கள் முழுக்காரைத் தயாரிக்க சுமார் மூன்று மணி நேரம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஃபோர்டு கம்பெனியில் 93 நிமிடங்களில் தயாரிக்க முடிந்தது. உற்பத்தி எக்கச்சக்கமாகக் கூடியது, செலவு குறைந்தது. நினைத்தபடியே 500 டாலருக்கு மாடல் டி (Model T) என்னும் காரைத் தயாரித்தார். 15 லட்சம் கார்களுக்கும் அதிகமாக விற்பனையாகி, மாடல் டி சரித்திரம் படைத்தது.

மாடல் டி எதிர்பாராத சமுதாய, பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்தது. கார் வாங்கியதால், தொழிலாளிகள் தங்களுடைய கிராமங்களிலிருந்து, தொழிற்சாலைகள் இருந்த பெரிய நகரங்களுக்கு வேலை பார்க்கப் போக முடிந்தது. அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. போக்குவரத்து வசதிகள் பெருகின, சாலைகள் வந்தன, வாணிபம் உயர்ந்தது.

அசெம்பிளி லைன் உற்பத்தி முறை இன்று உலகம் முழுக்கப் பின்பற்றப்பட்டு வருகிறது. பெருமளவு உற்பத்தி (Mass Production) நடக்கிறது. தரமான பொருட்கள் கட்டுப்படியாகும் விலையில் எல்லோருக்கும் கிடைக்கின்றன. தாங்க் யூ ஹென்றி ஃபோர்டு!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்