வேதாந்தா - ஃபாக்ஸ்கான் உடன் குஜராத் அரசு ரூ.1.54 லட்சம் கோடியில் ஒப்பந்தம்: வேலைவாய்ப்பு பெருகும் என பிரதமர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: செமிகண்டக்டர் மற்றும் தொடுதிரை உற்பத்திக்கு வேதாந்தா - ஃபாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்ட பின் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த முதலீடு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, துணைத் தொழில்கள் உருவாக உதவி செய்வதோடு எம்எஸ்எம்இ-க்களுக்கும் உதவும் என்றார்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேல் பகிர்ந்துள்ள ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் செமிகண்டக்டர்கள் உற்பத்தி நோக்கத்தை விரைவுபடுத்துவதில் முக்கியமான ஒன்றாகும். ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு என்பது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கும். துணைத் தொழில்கள் உருவாக உதவி செய்வதோடு எம்எஸ்எம்இ-க்களுக்கும் உதவும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE