ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், வளம் இந்த மூன்றும்தான் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்திலும் உலக நாடுகள் வியந்து பார்க்கும் அடிப்படை பண்புகள். நம்மைப் போன்று காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் இன்று ஜனநாயகத்தை தக்கவைக்க முடியாமல் தள்ளாட்டத்தில் உள்ளன. நமது அண்டை நாடான பாகிஸ்தானே இதற்கு உதாரணம். இன்றும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நாடாகவே அறியப்பட்டு வருகிறது பாகிஸ்தான்.ஆனால் இந்தியா அதற்கு நேரெதிர் மாறாக உள்ளது. மக்களாட்சி தத்துவத்துக்கு மிகச் சிறந்த உதாரணமாக போற்றப்படுவது இந்திய ஜனநாயகம் மட்டும்தான்.
பிரெஞ்சு நாவலாசிரியர் ஆன்ட்ரே மால்ரக்ஸ் கூறுவதைப் போல ‘‘அப்பழுக்கற்ற நமது விடுதலைப் போராட்ட வீரர், புனிதர்களால் இந்தியா வடிவமைக்கப்பட்டதால்தான் இந்தப் பெருமை. எகிப்தின் எதிர்காலத்தை இந்தியாவின் தற்போதைய மாதிரியைக் கொண்டு உருவாக்குவது குறித்து பேசுவதற்காக அரபு எழுச்சி இயக்கம் அழைத்தபோது அவர்கள் கேட்ட மூன்று கேள்விகள் இவைதான். ஒன்று எப்படி இந்திய ஜனநாயகம் ராணுவத்தின் பிடியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு உலக அரங்கில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை எப்படி இந்தியா தக்கவைத்துள்ளது. பல இனங்கள், மதங்கள் வாழும் இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை பேணிக்காப்பது எப்படி என்பதே மூன்றாவது கேள்வி.
இஸ்லாமிய மக்களை கணிசமான அளவில் கொண்டுள்ள இந்தியா அவர்களை சிறந்த முறையில் பேணிக்காத்து வருவது எப்படி என்பதை அறிந்து கொள்வதற்காகவே அவர்கள் இந்த கேள்வியை எழுப்பினர். இதற்கு தொடக்கத்தில் சொல்லிய மூன்று பண்புகள்தான் பதில்.
சுதந்திரத்தின் தொடக்கத்தில் சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருளாதாரசீரமைப்பு நடவடிக்கைகள், 1991-க்குப்பிறகு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கலை நோக்கி வேகமாக நகரத் தொடங்கியது.
» உ.பி.யில் மது, இறைச்சி பழக்கத்துக்கு அடிமையாகி 250 பெண்களை கடித்த குரங்குக்கு நிரந்தர சிறை
» நுகர்வு கலாசாரம் நமது திருமண பந்தத்தை வெகுவாக பாதித்திருக்கிறது - கேரள உயர் நீதிமன்றம்
அடுத்தடுத்து வந்த அரசுகள் கொண்டு வந்த திட்டங்களின் விளைவு, நடுத்தர வர்க்கத்தினரிடையே வேகமாக வளர்ச்சியை தூண்டியதுடன், 50 கோடி பேரை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்துள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களின் வளர்ச்சி வேகம் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கும் தொடருமானால் இந்தியா 100-வது ஆண்டு சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கும்போது பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கும் என்பது அசைக்க முடியா நம்பிக்கை.
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைளின் வேகம் மிதமான அளவில் இருந்தும்கூட உலக அளவில் வேகமாக வளரும் நாடாக இந்தியாவை மாற்ற உதவியுள்ளது கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன அந்த மூன்று அடிப்படை பண்புகள்தான்.
லட்சியவாதியான நேரு அக்கறையுடன் கூடிய சோஷலிச சமுதாயத்தை அமைக்க விரும்பினார். ஆனால், அதிகாரத்துவ வர்க்கம் உரிமம் பெற்று தொழில் தொடங்கும் 'லைசென்ஸ் ராஜ்'கொள்கை நடைமுறையையே அவருக்கு உருவாக்கி தந்தது. இது நமது பொருளாதார சுதந்திரத்தைப் பறித்தது.
அவருக்குப் பின் வறுமையை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சிக் கட்டிலில் ஏறிய இந்திராகாந்தியால் அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.
தனிநபர் தவறு செய்தால் அது அவரது குடும்பத்தை மட்டுமே பாதிக்கும்.ஆட்சியாளர்கள் தவறு செய்வார்களேயானால் அது ஒட்டுமொத்த தேசத்துக்கும் மிகப் பெரும் சோகமான முடிவையேதரும். 1991-க்கு முன் தவறவிட்ட வாய்ப்புகளில் இந்தியா 2 தலைமுறைகளை தியாகம் செய்துள்ளதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம்.
பிரமிப்பான ஐடி துறை
தற்போது நாம் வேகமாக வளரும்பொருளாதாரமாக உருவெடுத்துள்ளதற்கு தகவல் தொழில்நுட்பத் துறையின்(ஐடி) பங்கு மிக முக்கியமானது. அரேபியர்கள் இந்திய ஐடி துறையின் வளர்ச்சியை பிரமிப்பாக பார்க்கின்றனர். இந்த வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள்தான் அடிப்படை. இதர பொருள்களைப் போல் அல்லாமல் மென்பொருள்சேவை என்பது நேரடியாக வாடிக்கையாளரின் கனிணியை சென்றடைவது. இதனால், அரசின் உரிம நடைமுறை கட்டுப்பாடுகள் அதற்கு கிடையாது. இரண்டாவது நாஸ்காம் அமைப்புக்கும் சில அரசு அதிகாரிகளுக்கும் இடையே காணப்படும் ஒத்துழைப்பு.
எகிப்தியர்களில் 12% பேர் கிறிஸ்தவர்கள். இருப்பினும், அவர்களால் அங்கு பாதுகாப்பான சூழலை உணர முடியவில்லை. ஆனால், இந்தியர்களில் 13% பேர் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்கள் இங்கு இருப்பதை பாதுகாப்பாக உணர்கிறார்கள். அது எப்படி என்பது எகிப்தியர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. அதற்கான பதில் அந்த பாதுகாப்பான உணர்வுதான் இந்தியாவை ஸ்திரத்தன்மையுடன் வைத்துள்ளது. முதலீடு, வேலைவாய்ப்பு, வளம் கொழிப்பதும் அதனால்தான்.
ஆனால் தற்போதைய சூழல் அந்த நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையில் உள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்களில் சராசரியான பேர் பாதுகாப்பான சூழலில் இருப்பதாக உணரவில்லை.
சிறுபான்மை உரிமை நிலைநாட்டல்
சிறுபான்மையினருக்கான உரிமைகளை நிலைநாட்டி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமாகவே தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும். இந்திய சுதந்திரத்தின் 75-வது அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தை பெருமையுடன் நினைவுகூர்வதற்கு ஏராளமான சாதனைகள் உள்ளன.
மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்32-லிருந்து 70 ஆண்டாக அதிகரித்துள்ளது; கல்வியறிவு 12%-லிருந்து 78%-ஆக மேம்பட்டுள்ளது; ஏழ்மை நிலை 70%-லிருந்து 21 ஆக குறைந்துள்ளது; 90% மக்கள் மின்சார வசதியை பெற்றுள்ளது என சாதனை பட்டியல் நீளும்.
இந்த வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நாம் வீறு நடைபோடமுடியும். மற்ற நாடுகளைப் போல நிச்சயமற்ற தன்மை இங்கு காணப்படவில்லை. இந்தியாவின் வளர்ச்சி நிலையானதாகவும், கணிக்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது அதற்கு சான்று. அந்நிய முதலீடுகள் தொடர்ச்சியாக குவிந்து வருகின்றன. வரும் ஆண்டுகளில் உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று சர்வதேச பொருளியல் வல்லுநர்கள் போட்டி போட்டு கணிக்கின்றனர்.
இந்த பெருமிதமெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கல்வி, சுகாதாரம் என்ற மற்றொரு பக்கத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இந்த தோல்வி, நிதி பற்றாக்குறையால் உருவானதல்ல, நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்டவை.
தன்னார்வ அமைப்புகளின் புள்ளிவிவரங்களின்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் 4 ஆசிரியர்களில் ஒருவர்பணிக்கே வருவதில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் 10% குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி பெறுகின்றனர். மேற்குவங்கத்தில் பார்த்தா சட்டர்ஜியின் சமீபத்திய ஊழலே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதேபோன்ற மோசமான சூழ்நிலையைத்தான் அரசு ஆரம்ப சுகாதார மைய புள்ளிவிவரங்களும் எடுத்துக்காட்டுகின்றன.
நிர்வாகத் துறை போன்றே நீதித் துறை செயல்பாடுகளும் அண்மைக் காலமாகவே பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.
விடை தெரியா கேள்விகள்?
சாமானிய மக்கள் நீதி கிடைக்க 15 ஆண்டுகள் ஏன் காத்திருக்க வேண்டும்? மூவரில் ஒருவர் விசாரணைக் கைதியாக ஏன் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்? அருகில் உள்ளகாவல் நிலையத்துக்கு சென்று குறைகளை தெரிவிக்க நாம் ஏன் பயப்பட வேண்டும்? இந்தியாவின் எம்பி, எம்எல்ஏக்.களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏன் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்க வேண்டும்? திறமையானஅதிகாரிகள் ஒரே நாளில் முக்கியத்துவம் இல்லாத துறைக்கு ஏன் தூக்கியடிக்கப்பட வேண்டும்? 75வது சுதந்திர தின கொண்டாட்ட மகிழ்ச்சியிலும் தொடரும் விடை தெரியா கேள்விகள் இவை.
இந்தியாவின் 75 ஆண்டு கால உண்மையான வரலாறு என்பது தனியார் துறையின் இனிப்பான வெற்றி மற்றும் பொதுத் துறையின் கசப்பான தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
நிதர்சன உண்மை
இதர கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது வளர்ச்சியில் சராசரிமாநிலமாக இருந்தாலும் அம்மக்களின் கடின உழைப்பு, புத்திக் கூர்மை மட்டுமே இந்தியாவை அடிமட்டத்திலிருந்து மேலெழுந்து உச்சம் தொட உதவியுள்ளது.
வளரும் நாடு சர்வதேச அளவில்வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் நமது இலக்குக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பது நிர்வாகம், அரசு அமைப்புகளின் செயல்பாடுகள்தான். அதற்கு தீர்வு காணப்படாதவரை அந்த இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழில் அ.ராஜன் பழனிக்குமார்
முக்கிய செய்திகள்
வணிகம்
10 mins ago
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago