“இளைஞர்கள் 18 மணி நேரம் வேலை செய்யணும்” - அறிவுரை சொன்ன சிஇஓ-வுக்கு எதிராக கொந்தளித்த நெட்டிசன்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் தினசரி 18 மணி நேரம் வரையில் வேலை செய்ய வேண்டும் என்று பாம்பே ஷேவிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தனு தேஷ்பாண்டே அறிவுரை வழங்கியுள்ளார். அவரது இந்த ஃப்ரீ அட்வைஸ், நெட்டிசன்களை சினம் கொண்ட சிங்கமாக பொங்கி எழச் செய்துள்ளது.

உலக அளவில் ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்ற வழக்கம் உள்ளது. இதில், வார விடுப்பும் அடங்கும். ஊழியர்களின் நலன் சார்ந்து இது செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஊழியர்களின் வேலை நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து அவ்வப்போது பேச்சுகள் எழுவது வழக்கம். அத்தகைய சூழலில் பாம்பே ஷேவிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் நிறுவனரான சாந்தனு தேஷ்பாண்டே இது தொடர்பாக சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். அதனை தனது லிங்க்டு இன் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் 22 வயதான, வேலைக்கு புதிதாக சேர்ந்தவர் என்றால், உங்களை நீங்கள் செய்யும் வேலையில் அர்ப்பணியுங்கள். நன்றாக சாப்பிடுங்கள், ஃபிட்டாக இருங்கள். அதே நேரத்தில் உங்கள் வேலையில் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வரையில் முதல் 4 - 5 ஆண்டுகள் வரையில் கொடுங்கள். குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, புத்துணர்வு பெறுவது, வொர்க்-லைஃப் பேலன்ஸ் என நிறைய கன்டென்ட்களை பார்த்து, தாங்களும் அப்படித்தான் என தங்களை சமாதானம் செய்து கொள்ளும் இளைஞர்களை நிறைய பார்க்கிறேன். வேலை செய்பவர்களுக்கு இது மாதிரியான தேவைகள் எல்லாம் இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அது இவ்வளவு சீக்கிரம் தேவைப்படாது. புதியவர்கள் தங்கள் வேலையை தொழுவது அவசியம்” என தனது பதிவு அவர் தெரிவித்துள்ளார்.

இது இப்போது இணையவெளியில் நெட்டிசன்களின் கோபத்தை பெற்றுள்ளது. “ஏன் 18 மணி நேரத்தோடு நிறுத்தி விட்டீர்கள்? 24 அல்லது 48 என நீட்டிக்க வேண்டியது தானே?” என சமூகவலைதள பயனர் ஒருவர், சாந்தனு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது பதிவுக்கு எதிர்ப்பு கிளம்ப இதுவொரு பிராக்ஸி என இறுதியில் அதை எடிட் செய்து, மீண்டும் பதிவிட்டுள்ளார் சாந்தனு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE