தரைமட்டமான நொய்டா இரட்டை கோபுர கட்டிடத்தின் விதிமீறல் என்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விதிகளை மீறி 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் நேற்று 9 விநாடிகளில் தரைமட்டமானது. இந்தக் கட்டிடத்தின் விதிமீறல் குறித்து பார்ப்போம்.

கடந்த 2004-ம் ஆண்டில் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த சூப்பர்டெக் கட்டுமான நிறுவனத்துக்கு 17.29 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. புதிய குடியிருப்பு திட்டத்துக்கு ‘எமரால்டு கோர்ட்' என்று பெயரிடப்பட்டது. அங்கு 14 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை கட்ட கட்டுமான நிறுவனம் திட்டமிட்டது. ஒவ்வொரு வளாகமும் தரைத் தளம், 9 மாடிகளை கொண்டதாகும். இதற்கு நொய்டா ஆணையம் அனுமதி வழங்கியது. குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைக்கவும் ஆணையம் உத்தரவிட்டது.

கடந்த 2006-ம் ஆண்டில் சூப்பர்டெக் நிறுவனத்துக்கு கூடுதல் நிலம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதலாக 2 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களை கட்ட கட்டுமான நிறுவனம் முடிவு செய்தது. புதிய வளாகங்களுக்கு அபெக்ஸ், சேயான் என்று பெயரிடப்பட்டது. ஒவ்வொரு வளாகத்திலும் 40 மாடிகளை கட்ட நொய்டா ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இதன்படி அபெக்ஸ் வளாகத்தில் 32 மாடிகளும், சேயான் வளாகத்தில் 29 மாடிகளும் கட்டப்பட்டன.

இந்த புதிய இரட்டை கோபுர குடியிருப்பு திட்டத்தை எதிர்த்து ‘எமரால்டு கோர்ட்' குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கடந்த
2011-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் “பூங்கா அமைக்கப்பட வேண்டிய இடத்தையும் சேர்த்து இரட்டை கோபுர கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 2 கட்டிடங்களுக்கு இடையிலான இடைவெளி 16 மீட்டருக்கும் குறைவாக உள்ளது. இது உத்தர பிரதேச அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டத்துக்கு எதிரானது" என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் இரட்டை கோபுர கட்டிடத்தை இடிக்க கடந்த 2014-ல் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.

கட்டுமான நிறுவனம் விளக்கம்: சூப்பர்டெக் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2009-ம் ஆண்டில் நொய்டா ஆணையம் அளித்த அனுமதியின் பேரிலேயே இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டிடங்களை இடித்துள்ளோம். உலக அளவில் பிரபலமான எடிபிஸ் நிறுவனம் கட்டிடங்களை இடித்து கொடுத்திருக்கிறது.

இடிக்கப்பட்ட கட்டிடங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பணத்தை திருப்பி அளித்துவிட்டோம். நொய்டா பகுதியில் இதுவரை 70,000 வீடுகளை கட்டி உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம். எங்களது இதர கட்டுமான திட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.500 கோடி இழப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கட்டிட இடிப்புக்கான செலவை சூப்பர்டெக் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதனால் அந்நிறுவனத்துக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இரு அடுக்குமாடி குடியிருப்புகளில் 10,000 துளைகள் போடப்பட்டு 3,700 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டது, சென்னை ஐஐடியைச் சேர்ந்த 10 நிபுணர்களின் ஆய்வு, கோயில்பட்டியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் 550 காவலர்கள் பணியில் இருந்தது, இடிபாடுகள் விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய செய்தி இது > விதிகளை மீறி கட்டப்பட்ட 32 மாடி நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் 9 விநாடிகளில் தரைமட்டமானது - முழு விவரம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE