ஒவ்வொரு மனிதனையும் குறிப்பிட்ட நோக்கத்தோடு ஆண்டவன் படைத்திருக்கிறார். ஆகவே, அனைவருக்கும் வாழ்க்கையில் தனி இடமும் குறிக்கோளும் உண்டு.
- ஈஸா கேண்ட்லர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இதற்குத் தகுந்தபடி அடிப்படை வசதிகள் முன்னேறவில்லை. ஐயாயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்னும் நிலைமை. ஆகவே மக்கள் டாக்டரிடம் போகாமல், மருந்துக்கடைகள் தந்த மலிவுவிலைக் கஷாயங்களை வாங்கிக் குடித்தார்கள்.
அமெரிக்காவில், ஜான் ஸ்டித் பெம்பர்டன் மருத்துவப் படிப்பை முடித்தார். டாக்டர் தொழிலைத் தொடங்கினார். கொள்வாரில்லை. டாக்டர்களைவிட மருந்துக் கடைக்காரர்கள் விதம் விதமாகக் கஷாயங்கள் தயாரித்துக் கல்லா நிறைப்பதைப் பார்த்தார். தானும் மருந்துக்கடை தொடங்கினார். பலவகை அரிஷ்டங்கள் அறிமுகம் செய்தார். அவர் மனம் ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று அலைந்தது. அறிவியல் தொடர்பாகப் படிப்பார். படித்ததையெல்லாம் பரிசோதனை செய்து பார்ப்பார்.
அப்போது, தென் அமெரிக்காவில் வளர்ந்த கொக்கோ (Cocoa) என்னும் தழையின் இலையை மென்று தின்றால் புத்துணர்ச்சி வருவதாகக் கண்டுபிடித்தார்கள். இலையில் இருந்த கொக்கேன் என்னும் போதைப்பொருள்தான் இதற்குக் காரணம். இதேபோல், காஃபின் என்னும் சுறுசுறுப்பைத் தூண்டும் ரசாயனம், ஆப்பிரிக்காவில் கிடைத்த கோலா கொட்டை (Kola Nut) யில் இருந்தது.
1886 - ம் வருஷம் மே மாதம் 8 - ம் தேதி. கொக்கோ இலை, கோலா கொட்டை, காரமெல் என்கிற தீய்ந்த சர்க்கரை, எலுமிச்சம்பழ ஜூஸ், வெனிலா, சிட்ரிக் அமிலம், வாசனை சேர்க்க ஆரஞ்சு, ஜாதிக்காய், லவங்கம், கொத்துமல்லி, கொஞ்சம் ஒயின் என இத்தியாதி சமாச்சாரங்களை ஒரு அண்டாவில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சினார் பெம்பர்டன். கொதித்த பானம் குளிர்ந்தபின் குடித்தார். உடம்பு முழுக்கக் காற்றில் பறப்பதுபோல் “ஜிவ்” உணர்ச்சி.
பெம்பர்டன் தன் சிரப்புக்கு கோக கோலா என்று பெயர் வைத்தார். அன்று அமெரிக்காவில் சோடா ஃபவுன்டன்கள் என்னும் சோடாக்கடைகள் பிரபலம். சோடாவில் விதவிதமான கலவைகளைச் சேர்த்துத் தருவார்கள். பெம்பர்டனின் சிரப்பையும் சோடாவில் கலந்து விற்பனை செய்தார்கள். “சுவையான, உற்சாகமூட்டும், புத்துணர்ச்சியளிக்கும், ஊக்கம் தரும் இந்தப் பானம் நரம்புத் தொல்லைகள், தலைவலிகள், நரம்பு வலி, நரம்புத் தளர்ச்சி, மனச் சோர்வு ஆகியவற்றுக்கும் மருந்து” என்று விளம்பரம் செய்தார்கள்.
என்னதான் முண்டியடித்தாலும், தினசரி விற்பனை ஒன்பது கோப்பைகளைத் தாண்டவில்லை. கண்டுபிடித்த புதிய கஷாயம் தனக்குத் தங்கச் சுரங்கம் என்று நம்பிய பெம்பர்டன் மனம் உடைந்துபோனார். தன் கஷாயத்தின் மதிப்பு 425 டாலர்கள் என்று கணக்குப் போட்டார். (என்ன கணக்கோ?) 141. 67 டாலர்கள் மதிப்புக்கொண்ட மூன்றில் ஒரு பங்கைத் தான் வைத்துக்கொண்டு, மீதிப் பங்குகளை இருவருக்கு விற்றுவிட்டார்.
****
சினிமா இடைவேளையில் ஹீரோ என்ட்ரி. நம் கோக கோலா கதையில் இப்போது வருகிறார் ஈஸா கேண்ட்லர். பெம்பர்டன் ஆராய்ச்சிக்காரர், பிசினஸ் சமாச்சாரங்களில் கொஞ்சம் மந்தம். கேண்ட்லர் நேர் எதிர்மறை கேரக்டர். சிறுவயதிலிருந்தே உடம்பு முழுக்க பிசினஸ் மூளை.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வசித்த சாமுவேல், மார்த்தா தம்பதியருக்குப் பதினொன்று குழந்தைகள். எட்டாமவன் ஈஸா. விவசாயம், மளிகைக்கடை என்று இரண்டு குதிரைகளில் சாமுவேல் பயணித்தபோதும், வீட்டில் எப்போதும் வறுமைதான். ஈஸா காண்ட் லர் பத்தாம் வயதில் படிப்பை நிறுத்தினார். அப்பாவுக்கு உதவியாக இருந்தார். அம்மா ஆழ்ந்த கடவுள் பக்தி கொண்டவர். தெய்வ நம்பிக்கை, நேர்மை, உழைப்பு, பிறருக்கு உதவுதல் ஆகிய நல்ல குணங்களைக் குழந்தை கள் மனங்களில் ஆழமாகப் பதியவைத்தார்.
சிறுவயதிலேயே, ஈஸாவுக்குப் பணம் பண்ணுவதில் தனித்திறமை இருந்தது. தோட்டத்தில், அணிலைப்போன்ற மிங்க் (Mink) என்னும் பிராணி வந்தது. ஈஸா அதைக் கையில் பிடித்துக் கொன்றுவிட்டான். மிங்க் தோலால் உடைகள் தைப்பார்கள். ஆகவே, தோலுக்கு நல்ல விலை உண்டு. ஒரு வியாபாரி ஈஸா தந்த தோலுக்கு ஒரு டாலர் கொடுத்தார். இதன் பிறகு, மிங்க் பிராணிகளைத் வேட்டையாடிப் பிடித்து ஈஸா கணிசமான காசு பண்ணினான். ஈஸா டாக்டராக ஆசைப்பட்டார். வீட்டில் வசதியில்லை. ஆகவே, ஒரு மருந்துக்கடையில் உதவியாளராகச் சேர்ந்தார். அட்லாண்டா நகரத்தில் (பெம்பர்டன் வசித்த ஊர்) மருந்துக்கடைகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகக் கேள்விப்பட்டார். தன் 23 ஆம் வயதில் அட்லாண்டா வந்தார். முதல் 4 ஆண்டுகள் ஒரு கடையில் வேலை பார்த்தார். 1877 ஆம் ஆண்டு, தன் 27 ஆம் வயதில் சொந்த மருந்துக்கடை தொடங்கினார்.
11 வருடங்கள் இப்படியே ஓடின. ஈஸாவுக்குச் சின்ன வயதுமுதலே ஒற்றைத் தலைவலி வரும். எதைச் சாப்பிட்டாலும் தீராத தலைவலி. தற்செயலாக கோக கோலா குடித்தார். தலைவலி பறந்து போனது. இதற்குப்பின் கோக கோலாவுக்கு அடிமையானார். விற்பனையில் கோக கோலா கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் என்று நினைத்தார். ஆனால், விசாரித்தபோது, தினசரி விற்பனை ஒன்பது கோப்பைகள் மட்டுமே. சரியாக மார்க்கெட்டிங் செய்தால், கோக கோலாவைப் பணம் காய்ச்சி மரமாக்கலாம் என்று அவர் பிசினஸ் மூளை சொன்னது. பெம்பர்டனைத் தொடர்பு கொண்டார். கோக கோலா தயாரிப்பு ஃபார்முலாவை விலைக்குக் கேட்டார். பெம்பர்டனுக்கோ எப்போதும், வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தணாதான். பேரம் பேசினார்கள். பெம்பர்டனைப் பொறுத்தவரை அவர் பங்கின் விலை 141 டாலர்கள் 67 சென்ட்கள். ஈஸா 750 டாலர் தருவதாகச் சொன்னார். மாட்டினார் ஒரு இளிச்சவாயன் என்று அகமகிழ்ந்த பெம்பர்டன் உடனேயே தன் உரிமையைத் தாரை வார்த்தார். தங்க முட்டையிடும் வாத்து கையைவிட்டுப் போகிறது என்று கொஞ்சம்கூட உணராமலேயே.
இப்போது ஈஸா கச்சேரி ஆரம்பம். அதிரடி விளம்பரங்கள், கடைக்காரர்களை அடிக்கடி சந்திக்கும் விற்பனைப் பிரதிநிதிகள், இலவச சாம்பிள் விநியோகம் என்று அமெரிக்காவே அதிர்ந்தது. விற்பனை சிகரம் தொடவேண்டுமானால், கோக கோலாவை மருந்தாக மட்டுமே விற்பனை செய்தால் போதாது என்று கான்ட்லர் நினைத்தார். விளம்பர கோஷங்களில், மாற்றங்கள் செய்தார்;
1900 - கோக கோலா புத்துணர்ச்சி தருவது. தலைவலிக்கும், உடல் சோர்வுக்கும் கோக கோலா குடியுங்கள்.
1905 - கோக கோலா புத்துணர்ச்சி தருகிறது. பெண்களின் தாகம், சோர்வு, கவலைகள் தீர்க்கும் பானம்.
1907 - கோக கோலா புத்துணர்ச்சி ஊட்டும், சக்தி தரும் சுவையான பானம்.
1909 - சுவையான, புத்துணர்ச்சி ஊட்டும், தாகம் தீர்க்கும் கோக கோலா குடியுங்கள்.
சுமார் 28 வருடங்களில், கோக கோலா பற்றி மக்கள் மனங்களில் இருந்த பிம்பத்தை மாற்றிவிட்டார்.
****
உலகத்தின் டாப் 5 பிராண்டுகள் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட், கோக கோலா, ஃபேஸ்புக். இவர்களுள் நீண்ட நெடுங்காலமான இடம் கோக கோலாவுக்குத்தான். 200 நாடுகளில், 96 சதவீத மக்கள் கோக கோலா கம்பெனி சின்னத்தை அடையாளம் காண்கிறார்கள். ஒரு நாளைக்கு 1800 கோடி பாட்டில்கள் விற்பனை; 44 பில்லியன் டாலர்கள் (சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்) கல்லாவில் வசூல்.
1891 இல் தினசரி 9 கோப்பைகள் மட்டுமே விற்பனையாகிக் கொண்டிருந்த கோக கோலா உலக மகா பானமானது எப்படி? ஈஸா கேண்ட்லரின் மார்க்கெட்டிங் மாயாஜாலம்.
தொடர்புக்கு: slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
9 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago