பொருட்களை வாங்கும் வடிவம் தொடர்ந்து மாறி வருகிறது. கடைகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் இ-டெய்ல் என தொடர்ந்து மாறிவருகிறது. டிவி சானல்களில் ஒரு பகுதியாக இருந்த டெலிஷாப்பிங் என்னும் பிரிவு வளர்ந்து இப்போது ஷாப்பிங்கிற்கென பிரத்யேக சானல்கள் உருவாகி வருகின்றன. இதில் ஷாப்சிஜே ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி சானல்களில் ஒளிபரப்பு செய்துவருகிறது. தென் கொரியாவை சேர்ந்த சிஜேஓ ஷாப்பிங் குழுமம் இந்த சானல்களை நடத்தி வருகிறது. சீனா, ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளில் ஷாப்பிங் சானல்களை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) துருவா சங்கரகிருஷ்ணன் சந்த்ரி, சென்னையில் நடந்த ரீடெய்ல் மாநாட்டுக்கு வந்திருந்தார். அவருடன் உரையாடியதிலிருந்து…
உங்களுடைய சானல் எந்த அளவுக்கு மக்களிடம் சென்றடைந்திருக்கிறது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்?
ஒரு ஷாப்பிங் மாலில் தரைதளத்தில் கடை இருந்தால் அதிக மக்கள் வருவார்கள். நான்காவது மாடியில் இருந்தால் கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இங்கும் அதேபோலதான். ஹிந்தியை எடுத்துக்கொண்டால் முக்கியமான பொழுதுபோக்கு சானல்களுக்கு நடுவில் ஷாப் சிஜே ஹிந்தி இருக்கிறது. அதன் மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்க்க முடியும். தமிழில் எஸ்சிவியில் எங்களுடைய சானல் தெரிகிறது. டிடீஹெச்களில் நாங்கள் வரவில்லை. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு பகுதியாக விரிவுபடுத்திக்கொண்டே வருகிறோம். விரைவில் அனைத்து இடங்களிலும் தெரிவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகிறோம். `கபாலி’ திரைப்படத்தில் நாங்களும் ஒரு பார்ட்னர். எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் மக்களிடம் செல்வதற்கான வழியை உருவாக்குகிறோம்.
பொருட்களை தொட்டுப் பார்த்து வாங்கவே மக்கள் விரும்புவார்கள். ஏன் உங்களிடம் வாங்க வேண்டும்?
ஒரு பொருளை ஏன் வாங்க வேண்டும் எதற்காக வாங்க வேண்டும் அதன் பலன்கள் என்ன என்பது குறித்து சுவைபட விளக்குகிறோம். ஒரு சேலையை அணியும் போது எப்படி இருக்கும் என்பதைக் காண்பிக்கிறோம். பொருட்கள் என்றால் எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்குகிறோம்.
மேலும் நாங்கள் தமிழில் பிரத்யேகமாக கருத்துருக்களை உருவாக்குகிறோம். மற்றவர்களை போல டப்பிங் செய்வதில்லை. தனியே பொருள் விற்பனைக்காக ஸ்கிரிப்ட் எழுதுவதில்லை. ஒரு பொருளை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இயல்பாக விளக்குகிறோம். மக்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறதோ அதை விளக்குகிறோம். மேலும் நாங்கள் தள்ளுபடி கொடுக்கிறோம்.
இ-டெய்ல் நிறுவனங்கள் கூட தள்ளுபடி அளிக்கின்றனவே?
எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் வருடத்துக்கு சராசரியாக 13 முறை வாங்குகிறார்கள். கேஷ் ஆன் டெலிவரி, ரிட்டர்ன் ஆகியவை அனைவரும் செய்யகூடியவையே. வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவதற்கு எங்களிடம் தரம் மட்டுமே காரணம். நாங்கள் ஒவ்வொரு பொருட்களையும் தரச்சோதனைக்கு பிறகே விற்கிறோம்.
அடுத்த என்னென்ன மொழிகளில் தொடங்க இருக்கிறீர்கள்?
தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். கன்னடம், மலையாளம், பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம்.
`டிவியில் ஷாப்பிங் ஷோ ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு மொபைலை லாரி டயரில் வைத்து சோதனை செய்கிறார்கள். நாங்கள் ஏன் மொபைலை லாரி டயரில் வைக்கப்போகிறோம்.’ கடந்த வாரம் பேஸ்புக்கில் வந்த கமெண்ட் இது. உங்களுடைய சானலில் ஒளிபரப்பானதா என தெரியவில்லை. ஆனால் உங்களுடைய நிகழ்ச்சியில் மிகைப்படுத்துதலும் நாடகத்தன்மையும், அதிகமாக இருக்கிறதே?
மொபைலை லாரி டயரில் நீங்கள் வைக்கமாட்டீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும். நாங்கள் ஒரு மொபைலை கீழே போடுகிறோம் என்றால் மெதுவாக போடுவார்கள், கீழே வேறு எதாவது வைத்திருப்பார்கள் என்று நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் தோன்றும். இதை எப்படி வெளிப்படுத்த முடியுமோ அப்படித்தான் வெளிப்படுத்த முடியும். இதன் மூலம்தான் நம்பிக்கையை உருவாக்க முடியும்.
ஒரு கிரைண்டர் விற்பனையின் போது ஒரு சிறிய கிரானைட் கல்லை போட்டு அரைத்தோம். யாரும் கல்லை போட்டு அரைக்க மாட்டார்கள், ஆனால் மஞ்சள் அரைத்தால்? நம்பகத்தன்மை உருவாக்குவதற்கு இவை தேவைப்படுகின்றன. நாங்கள் நடத்துவது வகுப்பறையோ, ஆய்வுக் கூடமோ அல்ல. நாங்கள் தரச்சோதனை செய்யும் நிகழ்ச்சி நடத்தவில்லை. கொஞ்சமாவது பொழுதுபோக்கு இருக்க வேண்டும். இல்லை எனில் மக்கள் மற்ற சானல்களுக்கு சென்றுவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் ஹோம் ஷாப்பிங் என்றாலே ரியல் எஸ்டேட்தான். உங்களுக்கு அந்த திட்டம் இருக்கிறதா?
ஹிந்தியில் (மும்பையில்- ஹிராநந்தானி) சில புராஜெக்ட்கள் செய்திருக்கிறோம். தமிழில் சில நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். இன்னும் இறுதி முடிவெடுக்கவிலை.
வேறு என்னென்ன பொருட்களை விற்கிறீர்கள்?
ஆடைகள், மொபைல்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறோம். சுற்றுலா பேக்கேஜ்கள் கூட விற்கிறோம். காப்பீடுகள் கூட விற்றிருக்கிறோம். ரெலிகர் மற்றும் டாடா ஏஐஜியின் சில புராடெக்ட்களை விற்றிருக்கிறோம். ஆனால் தமிழில் இன்னும் இவை ஆரம்பிக்கவில்லை.
ஒரு பொருள் 333 ரூபாய் என விற்காமல் 3 பொருள் ரூ.999 என விற்கிறீர்களே. மக்களிடம் இருக்கும் பொருட்கள் வாங்கும் எண்ணத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா?
வேறு மாதிரியாகவும் எடுத்துக் கொள்ளலாம். மக்கள் பொருட்கள் வாங்குவதினால் பலருக்கு வேலை கிடைக்கிறது. நிறுவனங்கள் வளர்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம். பொருள் நுகர்வை சரி, தவறு என்று இரண்டு பதில்களுக்குள் அடக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு சரி, ஒரு தவறு இருக்கிறது. இரண்டு வாங்கினால் ஒரு பொருள் இலவசம் என பல வகையான விலையை நிர்ணயம் செய்கிறோம்.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago