டோலோ-650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடிக்கு இலவசங்கள் வழங்கப்பட்டன: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டோலோ-650 மாத்திரையை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்க சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசங்களை அந்த மாத்திரையை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் கொடுத்ததாக மருந்து பிரதிநிதிகளின் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் அதிகம் இருந்த நேரத்தில் பெரும்பாலான மக்கள், மருந்தகத்தில் அதிகம் வாங்கிய மாத்திரையாக அறியப்படுகிறது பாராசிட்டமால் ‘டோலோ-650’ மாத்திரை. டோலோ மாத்திரைகள் அதிகம் விற்பனையானது குறித்து செய்தியும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், டோலோ-650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசங்களை அந்த மாத்திரையை தயாரித்து வரும் நிறுவனம் வழங்கியதாக இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டமைப்பு தொடுத்துள்ள பொது நல வழக்கில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய வரிகள் வாரியத்தின் தரப்பு தெரிவித்த ஆதாரத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கேட்டறிந்த இரண்டு பேர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, இது மிகவும் முக்கியமான பிரச்சனை என தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒரு வார காலத்தில் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மருந்து, மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அதனை பரிந்துரைக்கும்படி மருத்துவர்களுக்கு இலவசங்களை ஊக்கமாக அளிக்கும் விவகாரத்தில் வழிகாட்டுதல் வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்தப் பொதுநல வழக்கை மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE