தமிழக வணிக வரித் துறையில் 4 மாதங்களில் மட்டும் ரூ.47,056 கோடி வருவாய்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக வணிக வரித் துறையில் 4 மாதங்களில் மட்டும் ரூ.47,056 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை வருவாய் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி கூறுகையில், “வணிக வரித் துறை கடந்த ஜூலை, 2022 மாதத்தில் ஈட்டிய வரி வருவாய் ரூ.9,557.00 கோடியாகும். இது சென்ற 2021-2022 நிதியாண்டில், ஜூலை, 2021 மாதத்தில் ஈட்டிய வருவாயான ரூ.6,674.00 கோடியை விட ரூ.2,883.00 கோடி அதிகமாகும்.

நடப்பு 2022-2023 நிதியாண்டில் 31.7.2022 வரை வணிக வரித் துறை ரூ.47,056.00 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வரிவருவாய் கடந்த 2021-2022 நிதியாண்டில் இதே காலத்தில், அதாவது 31.7.2021 வரை ஈட்டப்பட்ட வருவாயான ரூ.28,439.00 கோடியை விட, ரூ.18,617.00 கோடி அதிகமாகும். இதில் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி விகிதம் 65.46% ஆகும்.

மண்டலங்கள் தோறும் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களில், வரி ஏய்ப்பைத் தடுத்து அரசுக்கு முறையாக வந்து சேர வேண்டிய வரி வருவாய் விடுதலின்றி வசூலிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. துறையின் அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றி இந்த சாதனை வருவாயை ஈட்ட உறுதுணையாய் இருந்தனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

இதனைப் போன்று, பதிவுத் துறையில் ஜூலை 2022 மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.1,342.01 கோடி ஆகும். கடந்த 2021 வருட ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.1,242.22 கோடியை விட இது ரூ.99.79 கோடி அதிகமாகும்.

நடப்பு 2022-2023 நிதியாண்டில், ஜூலை, 2022 மாதம் வரை பதிவுத் துறையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.5718.90 கோடி ஆகும். இது கடந்த 2021-2022 நிதியாண்டில் இதே காலத்தில், அதாவது, ஜூலை, 2021 வரை ஈட்டப்பட்ட வருவாயான ரூ.3,342.87 கோடியை விட ரூ.2,376.03 கோடி அதிகமாகும். இவ்வகையில் பதிவுத் துறையிலும் வளர்ச்சி விகிதம் 71.07% என்ற அளவில் உயர்ந்துள்ளது என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

பதிவுத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளாலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு நடவடிக்கைகளாலும் இந்த சாதனை எய்தப்பட்டுள்ளது. அரசுக்கு பெருமளவில் வருவாய் ஈட்டித்தரும் இவ்விரு துறைகளும் தொடர்ந்து இதே போல் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE