ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு: ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்

By எல்லுச்சாமி கார்த்திக்

புதுடெல்லி: ஏழு நாட்கள் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் இந்த ஏலம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை எப்போது அறிமுகமாகும் என பயனர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர். இப்ப வருமோ, எப்ப வருமோ என அந்தக் காத்திருப்பு மெகா சீரியல் போல எண்டு கார்டு போடப்படாமல் நீண்டது. ஒரு வழியாக ஜூலை மாத இறுதியில் ஏலம் நடத்தலாம் என மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித்தது.

அதன்படி ஏலமும் ஜூலை 26 அன்று தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் என நான்கு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. 4ஜி வேகத்தை காட்டிலும் 10x மடங்கு கூடுதலான வேகத்தில் 5ஜி இணைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதானி நிறுவனம் தனி பயன்பாட்டுக்காக ஏலத்தில் பங்கேற்று இருந்தது.

சுமார் 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை மொத்தமாக ஏலம் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு 4ஜி ஏர்வேவ்ஸ் விற்பனையான ரூ.77,815 கோடியையும் காட்டிலும் இரு மடங்கு அதிகம். கடந்த 2010-ல் ரூ.50,968.37 கோடிக்கு ஏலம் போன 3ஜி-யை காட்டிலும் மும்மடங்கு அதிகம்.

வணிக ரீதியான லாபம்தான் இந்த ஏலம் இவ்வளவு ரூபாய்க்கு எடுக்கப்பட காரணம் என வல்லுநர்கள் சொல்கின்றனர். இன்றைய தேதியில் இந்தியாவில் சூடு பிடிக்கும் பிசினஸ் என்றால் அது டெலிகாம் துறைதான். கரோனா முதல் அலை நெருக்கடி நேரத்தில் சரியான லாபத்தை ஈட்டியது டெலிகாம் துறைதான் என்பதே அதற்கு உதாரணம்.

கடந்த மே 31-ம் தேதி தரவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக ஜியோ நிறுவனம் 40.87 கோடி மொபைல் பயனர்களையும், ஏர்டெல் 36.21 கோடி மொபைல் பயனர்களையும், வோடபோன் ஐடியா 25.84 கோடி பயனர்களையும் கொண்டு உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்திருந்தது. சுமார் 140 கோடி மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில் 100 கோடி பேர் மேற்கூறிய மூன்று டெலிகாம் நிறுவனங்களைதான் தொலைத்தொடர்பு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

தங்கு தடையற்ற இணைய சேவை மலிவான விலையில் பிளான்களை பயனர்களுக்கு கொடுக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை. அதன் காரணமாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் என மூன்று நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்றன. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் என இரண்டு நிறுவனங்களும் இந்தியா முழுவதும் தங்களது நிறுவனத்தின் 5ஜி தடத்தை பதித்து விட வேண்டுமென குறியாக உள்ளன. வோடபோன் அதில் ஆப்ஷன்களை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்கேற்ற வகையில்தான் இந்த நிறுவனங்கள் ஏலம் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இதில் இப்போதைக்கு ஜியோ அதிக தொகைக்கு 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஏல நடைமுறைகளும் அப்படிதான் உள்ளன. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் என அந்த வரிசை உள்ளது.

கடந்த ஜுலை 26-ம் தேதி தொடங்கிய 5ஜி ஏலத்தில் முதல் நாளன்றே ரூ.1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை ஏலம் போயிருந்தது. அதற்கடுத்த அடுத்த நாட்களில் ஏல தொகையின் வளர்ச்சி மார்ஜினலாக இருந்துள்ளது. எந்த நிறுவனம் எவ்வளவு 5ஜி அலைக்கற்றை வாங்கியுள்ளது என்ற விவரம் ஏலம் குறித்த தரவுகள் முழுவதும் தொகுத்து வெளியிடப்பட்டால் மட்டுமே தெரிய வரும்.

குறைந்த அதிர்வெண், நடுத்தர அதிர்வெண், உயர் அதிர்வெண் என மூன்று வகைகளில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. 600, 700, 800, 900, 1,800, 2,100, 2,300 மெகாஹெர்ட்ஸ் ஆகியவை குறைந்த அதிர்வெண்வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 3,000 மெகாஹெர்ட்ஸ் நடுத்தர அதிர்வெண் கீழும், 26 ஜிகாஹெர்ட்ஸ் உயர் அதிர்வெண் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

20 ஆண்டுகால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில் நிறுவனங்களின் நிதிச் சிக்கலைக் குறைப்பதற்காக, ஏலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நிறுவனங்கள், அலைக்கற்றைக்கான தொகையை மொத்தமாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின்போது அவ்வாண்டுக்கான தொகையை செலுத்திக்கொள்ளலாம்.

ஏலத்தை முன்னிட்டு சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போபால், டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் 5ஜி முன்னோட்ட சோதனை நடத்தியது. இந்தியாவில் தற்போது 4ஜி பயன்பாட்டில் உள்ளது. 4ஜி-யைவிட 5ஜியின் வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஏலத்துக்கான வைப்பு நிதியாக ஜியோ ரூ.14,000 கோடி, ஏர்டெல் ரூ.5,500 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.2,200 கோடி, அதானி குழுமம் ரூ.100 கோடி அளவில் செலுத்தியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்