ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் மக்களுக்கு என்ன பாதிப்பு? - ஒரு பார்வை

By செய்திப்பிரிவு

கடந்த பிப்ரவரி மாதம், ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.55 ஆக இருந்தது. தற்போது அது ரூ.80-ஐ தொட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டின் டாலர் - ரூபாய் நிலவரத்தையும் தற்போதைய நிலவரத்தையும் ஒப்பிட்டால் தற்போதைய சரிவின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும். 2018 டிசம்பரில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70 ஆக இருந்தது.

2021 டிசம்பரில் அது ரூ.74 ஆக இருந்தது. அதாவது மூன்று ஆண்டுகளில் ரூ.4 தான் சரிந்தது. ஆனால் தற்போது ஐந்தே மாதங்களில் ரூ.5.45 சரிந்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் மதிப்பு ரூ.82-க்கு கீழ் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த வீழ்ச்சி? ஏன் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் நாணய மதிப்பு அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது? ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் மக்களுக்கு என்ன பாதிப்பு? - பார்க்கலாம்.

தற்போதைய வீழ்ச்சிக்கு என்ன காரணம்?:

மூன்று காரணங்கள். 1.ரஷ்யா – உக்ரைன் போர் 2. அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித உயர்வு 3. வர்த்தகப் பற்றாக்குறை.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலைத் தொடங்கியது. ஐந்து மாதங்கள் கடந்தும் அந்தப் போர் நீடித்து வருகிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா முதன்மை நாடுகளில் ஒன்றாக உள்ளது. கோதுமை, சோளம், சூரியகாந்தி எண்ணெய், உரம், இரும்பு ஏற்றுமதியில் உக்ரைன் முக்கிய இடத்தில் உள்ளது. போரினால் இந்த ஏற்றுமதிகள் தடைபட்டதால் உலக அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

தவிர, இந்தப் போர் உலக அளவில் விநியோகக் கட்டமைப்பில் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பணவீக்கம் உச்சத்தைத் தொட்டது.

அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் அடைந்ததையடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பெடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியது.

ஒரு நாடு வட்டி விகிதத்தை உயர்த்தும்போது அந்நாட்டில் கடன் பத்திரங்களின் மீதான வட்டி வருவாய் அதிகரிக்கும். இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யத் தொடங்குவர்.

அமெரிக்கா அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் அந்நிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தையில் மேற்கொண்டிருந்த முதலீட்டைத் திரும்பப் பெற்று, அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், இந்தியாவில் டாலரின் இருப்பு குறையத் தொடங்கியது.

இவ்வாண்டு தொடக்கம் முதல் இதுவரையில் 30 பில்லியன் டாலருக்கு மேல் பங்குச் சந்தை தொடர்பான அந்நிய முதலீடு இந்தியாவிலிருந்து வெளியேறி இருக்கிறது. விளைவாக, இந்தியா ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு டாலரை 74 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தது.

தற்போது அதே ஒரு டாலரை 80 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளது.

ரஷ்ய - உக்ரைன் போர், பெடரல் ரிசர்வின் வட்டி விகித உயர்வு இவற்றையெல்லாம் தாண்டி, தற்போது இந்திய எதிர்கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மிக அடிப்படையான காரணம், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறைதான்.

மக்களுக்கு என்ன பாதிப்பு:

ரூபாய் வீழ்ச்சியின் நேரடி பாதிப்பு என்று சிலவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்விச் செலவு கணிசமாக உயரும்.

இந்தியா அதன் தேவையைப் பூர்த்தி செய்வதில் இறக்குமதியை பெரிதும் சார்ந்து இருப்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.

தற்போது கச்சா எண்ணெய், எரிவாயு, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட இறக்குமதிக்கு அதிக பணம் வழங்க வேண்டிய சூழலில் இந்தியா உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், சரக்கு லாரிகளின் கட்டணம் உயரும்.

இதனால் காய்கறி உட்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும். மின்னணு மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வால் மொபைல்போன், லேப்டாப் உட்பட மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களின் விலை உயரும். ஏற்கனவே இந்தியாவில் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், முடிவின்றி வீழும் ரூபாய் மதிப்பு, மக்கள் உழைத்து ஈட்டும் வருமானத்தை அர்த்தமிழக்கச் செய்யும்.

வர்த்தகப் பற்றாக்குறை:

இந்திய நாணய மதிப்பு மட்டுமல்ல பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளின் நாணய மதிப்பும் தற்போது பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. ஆனால், அந்நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு ஆறுதல் அடைந்துவிட முடியாது. ஜப்பானின் பொருளாதாரமும், பிரிட்டனின் பொருளாதாரமும் வலுவானவை; பரந்துபட்டவை.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அந்த இடைவெளி அதிகரித்தபடி செல்கிறது. நடப்பு நிதி ஆண்டு முதல் காலாண்டில் வர்த்தகப் பற்றாக்குறை 70.8 பில்லியன் டாலராக (ரூ.5.6 லட்சம் கோடி) உள்ளது. சென்ற நிதி ஆண்டு முதல் காலாண்டில் அது 31.4 பில்லியன் டாலராக (ரூ.2.5 லட்சம் கோடி) இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை இரு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது.

பொதுவாக ஒரு நாடு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும்போது அந்நாட்டுக்குள் டாலர் வரவு அதிகரிக்கும். அதுவே ஒரு நாடு அதிக அளவில் இறக்குமதி செய்யும்போது டாலர் இருப்பு குறையும். அதாவது, இறக்குமதி அதிகரிக்க அதிகரிக்க ஒரு நாட்டின் பண மதிப்பு வீழ்ச்சி அடைந்துகொண்டே செல்லும். அந்தவகையில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை குறையாத வரையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்