மோசடி புகார்?- 4 கூட்டுறவு வங்கிகளில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு

By செய்திப்பிரிவு

மும்பை: மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள 4 கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி கிடைப்பதால், கிராமப்புற விவசாயிகள், சிறு, குறு வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளில் தங்கள் பணத்தை சேமிக்கின்றனர். ஆனால் அங்கு அவ்வப்போது நடந்து வரும் மோசடிகளால், கூட்டுறவு வங்கிகள் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாக மாறிவருகிறது. கடந்த 5 நிதியாண்டுகளில் மட்டும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ரூ.220 கோடி முறைகேடு நடைபெற்று இருக்கிறது. அதுதொடர்பாக, 1,000 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பி.எம்.சி. எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி சில ஆண்டுகளுக்கு முன்பு ஹவுசிங் டெவலப்மென்ட் மற்றும் இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.6,500 கோடி வரை கடன் வழங்கியது. இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பைவிட நான்கு மடங்கு அதிகம். இந்த ஊழல் வெளியே தெரியவர பி.எம்.சி. வங்கியின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி 6 மாதம் தடை விதித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

தங்கள் பணம் ஏமாற்றப்பட்டுவிட்டது என்ற அதிர்ச்சியில் அதன் சில வாடிக்கையாளர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். இதனையடுத்து கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

இந்தநிலையில் இந்திய ரிசர்வ் வங்கி நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு ஒருசில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, தி சூரி நண்பர்கள் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சூரி மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் ஆகிய நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நான்கு வங்கிகளின் மோசமான நிதி நிலைகளை கருத்தில் கொண்டு, சாய்பாபா ஜனதா சககாரி வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ. 20,000 மட்டுமே பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. அதேபோல் தி சூரி பிரண்ட்ஸ் யூனியன் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ. 50,000 பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கியில், ஒரு வாடிக்கையாளருக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் ஆறு மாதங்களுக்கு தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு பின் இந்த வங்கிகளின் செயல்முறைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என தெரிகிறது.

இதுமட்டுமின்றி சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிக்கு ரூ.57.75 லட்சம் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE