விரைவில் மத்திய அரசின் டிஜிட்டல் கரன்சி: ரிசர்வ் வங்கி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு அடையாளம் தெரியாத குழுக்களால் பிட்காயின் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தலையீடு ஏதும் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் பொருட்கள், சேவை பெறவும் பணப் பரிமாற்றத்துக்கும் பிட்காயின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் பிட்காயினில் முதலீடு செய்வது, பிட்காயினில் வர்த்தகம் செய்வது, பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. ஆனால் எந்த கட்டுப்பாடும், விதிமுறையும் இல்லாமல் செய்யப்படும் இதுபோன்ற முதலீடுகளில் பலர் பெருமளவு பணத்தை இழந்து வருகின்றனர்.

இதையடுத்து கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த மசோதாவின் மூலம் சில தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடை கொண்டுவரப்படும்.

அதே நேரம், ரிசர்வ் வங்கி மூலம் அல்லது ஒப்புதலுடன் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிதொழில்நுட்ப பிரிவின் நிர்வாக இயக்குனரான அஜய் குமார் சவுத்ரி இதுகுறித்து கூறியுள்ளதாவது:

டிஜிட்டல் கரன்சி, மொத்த விலை மற்றும் சில்லரை பிரிவுகளில் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல விரும்புவதில்லை. அவை மொபைல் போனிலேயே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

யு.பி.ஐ., வாயிலான பணப்பரிவர்த்தனைகளில், நாம் ஏற்கெனவே சாதனை படைத்திருக்கும் நிலையில், விரைவில் டிஜிட்டல் கரன்சியும் அறிமுகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE