ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து பின்வாங்கல் - ஒப்பந்தத்தை நிறுத்திய எலான் மஸ்க்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார் எலான் மஸ்க்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக சில வாரங்கள் முன் அறிவித்தார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

எனினும் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்து இருந்தார். இதற்கு காரணம் ட்விட்டர் கூறுவதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும், தேவையற்ற செலவுகளால் லாபமற்ற நிறுவனமாக ட்விட்டர் இருப்பதாகவும் மஸ்க் கூறியிருந்தார். இதனால் ஒப்பந்தம் முடிந்தாலும் அது செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்விக்கு விடையாக, தற்போது ட்விட்டர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளார் எலான் மஸ்க். போலி கணக்குகள் பற்றிய தகவல்களை நிறுவனம் வழங்கத் தவறியதால், ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மஸ்க் இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ட்விட்டரின் பங்குகள் 7% சரிந்தன.

மஸ்க்கின் அறிவிப்பு அவருக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே சட்டப் போராட்டத்தை நடத்த வழிவகுத்துள்ளது. ஏனென்றால், முன்னதாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி மஸ்க் டீலிங்கை முடிக்கவில்லை என்றால் $1 பில்லியன் பிரேக்-அப் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதை முன்னிறுத்தி ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது.

ட்விட்டரின் தலைவர், பிரட் டெய்லர் தனது பதிவில், "இணைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கையைத் தொடர திட்டமிட்டுள்ளோம். இந்த சட்டப் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE