மும்பை: ரஷ்யாவிடம் இருந்து ரிலையன்ஸ், பொதுத்துறை நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதனை சுத்திகரித்து பெட்ரோல், டீசலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக லாபம் ஈட்டி வந்தன. இந்தநிலையில் ஏற்றுமதியாகும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6 வரியும் டீசல் லிட்டருக்கு ரூ.13 வரியும் விதித்து மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,230 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் இன்று ரியைலன்ஸ், ஓன்ஜிசி பங்குகள் கணிசமான சரிவை சந்தித்தன.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.
லாபத்தை அள்ளித்தரும் ரஷ்ய கச்சா எண்ணெய்
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது.
குறிப்பாக தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மே மாதத்தில் 10.81 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது.
» குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1977: போட்டியின்றி குடியரசுத் தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி!
இதனை ரிலையன்ஸ் நிறுவனம் சுத்திகரித்து இதே துறைமுகத்தில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒட்டுமொத்த கச்சா இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு ஐந்தில் ஒரு பங்காக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவின் ரோஸ் நேபிட்டின் துணை நிறுவனத்திற்கும், சரக்கு வர்த்தகரான ட்ராபிகுராவின் துணை நிறுவனத்திற்கும் சொந்தமான நயாரா நிறுவனமும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி 340,000 பீப்பாய்கள் டீசலை ஏற்றுமதி செய்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் பொதுத்துறை நிறுவனங்களும் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளன.
வரி விதிப்பு
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு இன்று வரி விதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,250 (சிறப்பு கூடுதல் கலால் வரி மூலம்) சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், சர்வதேச விலைக்கு ஏற்ப உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்கின்றனர்.
இதனால் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் அதிகளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23,250 செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்த செஸ் வரி விதிக்கப்படாது.
உள்நாட்டு உற்பத்தியாளர் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது. இந்த செஸ் வரி உள்நாட்டு பெட்ரோல், எரிபொருள் விலைகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மேலும், நிதியாண்டில் ஆண்டுக்கு 2 மில்லியன் பீப்பாய்களுக்கு குறைவாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர்களுக்கு இந்த செஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேலும், முந்தைய ஆண்டைவிட கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு, கூடுதல் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக செஸ் வரி விதிக்கப்படாது. இந்த நடவடிக்கை, கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களில் விலையை பாதிக்காது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு சிறப்பு கூடுதல் கலால் வரி/ செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 6 ரூபாய் வீதமும், டீசலுக்கு லிட்டருக்கு 13 ரூபாய் வீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களாக கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. சுத்திகரிப்பு நிறுவனங்கள், உலக அளவில் நிலவும் விலைக்கு ஏற்ப தயாரிப்புகளை விற்பனை செய்து, அதிக லாபம் ஈட்டி வருகின்றன. இதனால் சில சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தையில் பாதிப்பை சந்திக்கின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் மீது லிட்டருக்கு 6 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 13 ரூபாயும் செஸ் விதிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பெட்ரோல், டீசலுக்கும் இந்த செஸ் பொருந்தும். ஏற்றுமதி பெட்ரோல், டீசல் மீதான இந்த நடவடிக்கை உள்நாட்டு சில்லறை விற்பனையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட், தனியார் நிறுவனமான கெய்ர்ன் ஆயில் & கேஸ் ஆஃப் வேதாந்தா லிமிடெட் ஆகியவை கச்சா எண்ணெய் உற்பத்தி மூலம் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன.
இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 29 மில்லியன் டன்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்துகின்றன. இந்த வரி விதிப்பின் மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.67,425 கோடி கிடைக்கும் எனத் தெரிகிறது.
பங்குகள் கடும் சரிவு
இதனால் பங்குச்சந்தையில் இன்று ரியைலன்ஸ், ஓன்ஜிசி பங்குகள் கணிசமான சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் சந்தை மதிப்பில் 19.35 பில்லியன் டாலர்கள் குறைந்தது. அதன் பங்கு 8.7 சதவீதம் வரை சரிந்தது. இது நவம்பர் 2, 2020 முதல் அதன் மிகப்பெரிய தினசரி வர்த்தகத்தில் சரிவாகும்.
மும்பை பங்குச்சந்தையில் இன்று அந்த பங்குகள் கடைசியாக 6 சதவீதம் குறைந்து ஒரு பங்கிற்கு ரூ.2,436 ஆக இருந்தது. சந்தை மூலதனம் ரூ.16.5 லட்சம் கோடியாக இருந்தது.
அதுபோலவே ஓஎன்ஜிசி பங்குகள் 12.3 சதவிகிதம் சரிந்தது. இது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23 தேதிக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். ஆயில் இந்தியா கிட்டத்தட்ட 11 சதவிகிதம் சரிந்தது. மங்களூர் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவன பங்குகள் 10 சதவிகிதம் சரிந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago