அடுத்தது நிலக்கரி: சத்தமில்லாமல் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி: 30% தள்ளுபடியில் வாங்கிக் குவிக்கும் இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா தற்போது 30 சதவீத தள்ளுபடியில் நிலக்கரியையும் வாங்கி குவித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் 6 மடங்கு நிலக்கரி ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் மலிவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.

மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெய் சாதனை அளவை எட்டியுள்ளது. மே மாதத்தில் ஒரு நாளைக்கு 840,645 பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது ஏப்ரலில் 388,666 பீப்பாய்களாக இருந்தது.

30% தள்ளுபடியில் கச்சா எண்ணெய்

இதனால் மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது. அதிக சப்ளை செய்த நாடுகள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இராக் உள்ளது.

இதுவரை இரண்டாமிடத்தில் இருந்த சவூதி அரேபியா தற்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு போக்குவரத்து செலவு அதிகமாக இருந்ததால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்திய நிறுவனங்கள் வாங்குவது குறைவாக இருந்தது. தற்போது அதிகமான தள்ளுபடி விலையில் கிடைப்பதால் இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகஅளவில் இறக்குமதி செய்து வருகின்றன.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெய் அளவு மே மாதத்தில் சுமார் 16.5 சதவீதமாகும். ஜூன் மாதத்தில் இது மேலும் உயரக்கூடும். ஜூன் மாத இறக்குமதி 1.05 மில்லியன் பீப்பாய்கள் என்ற உச்ச எண்ணிக்கையை தொடும் என நம்பப்படுகிறது.

பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 30 டாலர் விலைக்கும் குறைவாகவே ரஷ்யா வழங்குகிறது. இதனால் இந்தியாவின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன.

நிலக்கரி இறக்குமதி

இந்தநிலையில் கச்சா எண்ணெயை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இதனையும் 30 சதவீத தள்ளுபடி விலையில் இந்தியா வாங்கி வருவதாக தெரிகிறது.

அதிக தள்ளுபடியை வழங்கியதால், சமீபத்திய வாரங்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிகஅளவில் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்ததால் 30% தள்ளுபடி விலையில் ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

இதனைத் தொடர்ந்து நிலக்கரியும் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிக சரக்கு செலவுகள் இருந்தபோதிலும் 30 சதவீத தள்ளுபடி விலையில் கிடைப்பதால் இந்தியா ரஷ்ய நிலக்கரியை வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


வெளியிடப்படாத இந்திய அரசின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி இந்த செய்தியை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 15 வரையிலான 20 நாட்களில் அதன் நிலக்கரி மற்றும் தொடர்புடைய பொருட்களை வாங்குவது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே நேரத்தைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாகியுள்ளது. 331.17 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.

இதேபோல் 20 நாட்களில் ரஷ்யாவுடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மதிப்பு 31 மடங்கு அதிகரித்து 2.22 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டன. இதனால் பல மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பப்பட்டது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு ரயில்கள் மூலம் வேகமாக கொண்டு செல்லப்படுகின்றன. இந்தநிலையில் தான் ரஷ்ய நிலக்கரி இந்தியாவுக்கு கைகொடுத்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்