வட்டியை உயர்த்திய அமெரிக்க பெடரல் வங்கி: பெரும் சரிவு கண்ட இந்திய பங்குச்சந்தைகள்

By செய்திப்பிரிவு

மும்பை: அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் எதிரொலி இந்திய பங்குச்சந்தைகளில் இன்று எதிரொலித்தது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் பெரும் சரிவுடன் முடிவடைந்தன.

கரோனா பரவலால் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்குப் பிறகு பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.

இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தது. பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பணவீக்க விகிதம் உயர்ந்து வருகிறது.

இதுமட்டுமின்றி சீனாவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமலாக்கம் செய்யப்படுவதாலும் சப்ளை செயின் பாதிக்கப்பட்டு இதனால் விலைவாசி பெரிய அளவில் உயரும் நிலையும் உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாதவகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 75 புள்ளிகள் நேற்று உயர்த்தியுள்ளது.

கடந்த 1994ம் ஆண்டுக்குப்பின் அமெரி்க்காவில் பெடரல் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை இந்த அளவு உயர்த்தியுள்ளது இதுதான் முதல்முறையாகும். இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்று வெளியேறும் என கருதப்பட்டது.

இதன் எதிரொலி இன்று இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சென்செக்ஸ் 1045.60 புள்ளிகள் அல்லது 1.99 சதவீதம் குறைந்து 51,495.79 ஆக முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 331.55 புள்ளிகள் அல்லது 2.11 சதவீதம் குறைந்து 15,360.60 ஆக முடிவடைந்தது.

இரண்டு பெஞ்ச்மார்க் குறியீடுகளுக்கும், சமீபத்தியது ஒரு வருடத்தில் மிகக் குறைந்த அளவாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி சரிவு கண்டது. டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, விப்ரோ, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகளும் சரிந்தன. நெஸ்லே இந்தியா மட்டுமே லாபம் ஈட்டியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE