வாழ்க்கை வரலாறுகள் வெறும் அனுபவங்களின் தொகுப்பு அல்ல, மாபெரும் மனிதர்கள் உங்கள் கைவிரல்களை அழுந்தப்பிடித்து அழைத்துப்போகும் வாழ்க்கைப் பயண ஒத்திகை; தங்கள் தோள்களில் உட்காரவைத்து உங்களுக்குக் காட்டும் புதிய உலகம்; தங்கள் வெற்றி ரகசியங்களையும், செய்த தவறுகளையும் பகிர்ந்துகொண்டு உங்களைப் பட்டை தீட்டும் பாசறை. அவர்கள் ஜெயித்திருந்தாலும், தோற்றிருந்தாலும், எழுந்திருந்தாலும், விழுந்திருந்தாலும், ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு பாடம்.
- ப்ரையன் ட்ரேசி, அமெரிக்கச் சுய முன்னேற்றப் பயிற்சியாளர்
வாருங்கள். இந்தியாவின் சில பிசினஸ் பிரபலங்களைச் சந்திப்போம்.
குஜராத் கிராமத்தின் ஒரு குக்கிராமத்தில் பள்ளி ஆசிரியர் மகனாகப் பிறந்த திருபாய் அம்பானிக்குக் கல்லூரிப் படிப்பைத் தொடரக் குடும்பத்தில் வசதி இல்லை. ஏடன் நாட்டுக்கு வேலைக்குப் போனார். ஓரளவு சேமிப்புடன் இந்தியா திரும்பினார். வெறும் 15,000 ரூபாய் முதலீட்டில் பிசினஸ் தொடங்கினார். பால்காரர்கள், தையல்காரர்கள் வசிக்கும் புலேஷ்வர் பகுதியில், 500 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு ரூம் குடியிருப்பு. அதில், திருபாய், அவர் தம்பி, மனைவி, இரண்டு குழந்தைகள் என ஐந்து பேர்.
இன்று, திருபாயின் மூத்த மகன் முகேஷ் வீடு மும்பையின் ஆடம்பரமான அல்ட்டாமவுண்ட் ரோடில், உயர்ந்து நிற்கும் அன்டிலியா என்னும் 27 மாடிக் கட்டடம். 550 அடி உயரம். நாலு லட்சம் சதுர அடி பரப்பு. மாடியில் மூன்று ஹெலிக்காப்டர்கள் ஏறி இறங்கும் ஹெலிப்பாட்கள். வீட்டுக்குள் நீச்சல் குளம், 168 கார்களை ஹாயாக நிறுத்தும் கார் பார்க். வீட்டுக் கார்களிலும் விருந்தாளிகள் கார்களிலும் கோளாறு வந்தால் ரிப்பேர் செய்ய ஒரு முழுத் தளம், உடற்பயிற்சி செய்ய இன்னொரு தளம், ஐம்பது பேர் ஜாலியாக உட்கார்ந்து சினிமா பார்க்கும் ஹோம் தியேட்டர். திருபாய் அமைத்த அஸ்திவாரம்!
இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தியின் அப்பா மைசூரில் பள்ளி ஆசிரியர். 9 குழந்தைகள். அரசினர் பள்ளியில் படிப்பு. ஸ்காலர்ஷிப் பணத்தில் பி.ஈ பட்டம். அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் வேலை. 30 ஆம் வயதில் சாஃப்ட்ரானிக்ஸ் என்னும் கம்பெனி தொடங்கினார். நஷ்டம். ஒன்றரை வருடத்தில் கம்பெனியை மூடவேண்டிய கட்டாயம். வேலைக்குப் போனார். 5 வருடங்களுக்குப் பிறகு, 1981 இல், இன்ஃபோஸிஸ் தொடங்கினார். அப்போது, முதலீடு செய்ய அவரிடம் பணமே கிடையாது. மனைவி சுதா கொடுத்த பத்தாயிரம் ரூபாய்தான் கை கொடுத்தது.
பி.சி. முஸ்தஃபா கேரள மாநிலம் சென்னலோடு என்னும், குக்கிராமத்தில் 1974 இல் பிறந்தார். அரிக்கேன் விளக்கில் படிப்பு. ஆறாம் வகுப்பில் தோல்வி. படிப்பை விட்டுவிட்டுக் கூலி வேலைக்குப் போக முடிவெடுத்தார். கணித ஆசிரியர் மாத்யூ வற்புறுத்தலால், படிப்பைத் தொடர்ந்தார். இன்ஜினீயரிங், பெங்களூரு ஐ.ஐ.எம் இல் எம்.பி.ஏ எனப் படிப்பு தொடர்ந்தது. பல நிறுவனங்களில் பணியாற்றியபின், 2006 இல், 25,000 ரூபாய் முதலீட்டில் இட்லி, தோசை மாவு விற்பனை தொடங்கினார். இன்று iD Fresh Foods கம்பெனியின் ஆண்டு விற்பனை 100 கோடிக்கும் அதிகம்.
பாரத்மாட்ரிமனி.காம். இதுவரை சுமார் 30 லட்சம் திருமணங்கள் நடக்கப் பாலமாக இருந்திருக்கிறது. இந்த வெற்றிக் கதைக்கு வித்திட்ட முருகவேல் ஜானகிராமனின் அப்பா சென்னைத் துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி. 16 ஒண்டுக் குடித்தனங்களுக்கு நடுவில் ஒரே ரூம் வீடு. அங்கே பிறந்து வளர்ந்த முருகவேல் ஜானகிராமனின் இன்றைய வெற்றி, அறிவு, உழைப்பு, வித்தியாசச் சிந்தனை ஆகியவற்றால் உருவாக்கிய சுயமுயற்சி ராஜபாட்டை.
திருப்பூர் கோவை ரூட்டில் இருக்கும் முருகம்பாளையம் கிராமம். ரயில்வேயில் வேலை பார்த்த விநாயகப்பக் கவுண்டரின் மகன் பழனிச்சாமி. எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கமுடியாத குடும்ப நிலை. அண்ணனும், அவரும் திருப்பூரில் பனியன் கம்பெனி யில் வேலைக்குச் சேர்ந்தார்கள். தினச் சம்பளம் மூன்று ரூபாய். நான்கு வருட அனுபவம். 1976. ஆயிரம் ரூபாய் முதலீட்டில், ஒரே ஒரு பழைய தையல் மெஷினோடு தொடங்கினார்கள். இன்று ஜே.வி. குழுமத்தில் 5 நிறுவனங்கள், 1,000 தொழிலாளிகள். பின்னலாடைகள், பருத்தி நூல், எலாஸ்டிக் டேப்கள் தயாரிப்பு. விற்பனை 250 கோடிக்கும் அதிகம்.
1950 காலகட்டம். கோயம்பத்தூர். 11 வயது சின்னசாமி, 9 வயதுத் தம்பி நடராஜன். குடும்ப வறுமை. படிப்பை நிறுத்தவேண்டிய கட்டாயம். ஜூஸ் கடையில் வேலைக்குப் போனார்கள். பல வருடங்கள் ஓடின. இருவருக்கும் டெக்ஸ்டைல் மில்லில் வேலை கிடைத்தது. பிசினஸ் தொடங்கினார்கள். முதல் கடை எது தெரியுமா? தள்ளு வண்டி! வேலை நேரம் முடிந்து வந்தவுடன் காய்கறி வியாபாரம். 1965. தள்ளுவண்டி சின்னக் கடையாக வளர்ந்தது. இன்று, கோவை பழமுதிர் நிலையத்துக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய பகுதிகளில் 46 கிளைகள், பல நூறு கோடி ரூபாய் வியாபாரம்.
இவர்களில் ஒருவர்கூட பிசினஸ் குடும்பங்களிலோ, செல்வச் செழிப்பிலோ பிறக்கவில்லை, வளரவில்லை. இவர்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் ஜூஜூபி. தொழில் தொடங்காததற்குக் “காரணங்கள்” என்று நீங்கள் நினைப்பவையெல்லாம் வெறும் சாக்குப்போக்குகள், பயங்கள்.
முதலாளி ஆகவேண்டுமா? முதலில் இந்த பயங்களை நீங்கள் ஜெயிக்க வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, தண்ணீரில் குதித்தால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் என்று கண்ணை மூடிக்கொண்டு பிசினஸ் ஆரம்பிக்கவேண்டும். இது ரிஸ்க்கான வழி. உங்கள் வாழ்க்கையோடு நீங்கள் விளையாடலாமா? கூடாது, கூடவே கூடாது. ஆகவே, அடுத்த வழி, புத்தி சாலித்தனமான வழி. பிசினஸ் நடத்தி யவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது. இதற்கு என்ன செய்யவேண்டும்? உலக மகா பிசினஸ்மேன்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கவேண்டும்.
படிக்கப் படிக்க, ``என்னால் முடியும்” என்னும் நம்பிக்கை நம் மனங்களில் தோன்றும், தொழில் முனைவராகும் பொறி வெறியாகும், கனவுகள் நனவாகும், வானம் வசப்படும்.
உலக நாடுகளில் பல லட்சம் பிசினஸ்மேன்கள். இவர்களுள், நமக்கு வழிகாட்டும் முன்னோடிகள் யார்? உலக முன்னணி நிர்வாகக் கல்லூரியான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர்கள் அந்தோனி மேயோ, நித்தின் நோரியா இருவரும் ஆயிரத்துக்கும் அதிகமான பிசினஸ்மேன்களின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ச்சி செய்தார்கள். 7,000 மேனேஜர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். இந்த அடிப்படையில், தங்களுடைய In Their Time The Greatest Business Leaders of the Twentieth Century என்னும் புத்தகத்தில் 100 பிசினஸ்மேன்களைத் தலை சிறந்தவர்களாக அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.
இது தவிர, Entrepreneur, Fast Company, Forbes, Fortune, Inc., Success பத்திரிகைகளும், யாஹூ இணையதளமும் உலகின் மாபெரும் பிசினஸ்மேன்களை அணிவகுக்க வைத்திருக்கிறார்கள்.
ஹார்வர்ட் ஆராய்ச்சியிலும், இந்தப் பட்டியல்களிலும் இடம் கொடுக்க எந்தத் தகுதிகளை அளவுகோல்களாகப் பயன்படுத்தினார்கள்? விற்பனையிலும், லாபத்திலும் குவித்த கோடிகள், பூஜ்ஜி யத்திலிருந்து வர்த்தக சாம்ராஜ் ஜியங்கள் உருவாக்கிய அசுரச் சாதனை ஆகியவற்றைத் தாண்டி, இவர்கள் தொடங்கிய பிசினஸ்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், இவர்களின் அனுபவங்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் சென்றிருக்கும் பாடம் ஆகியவை.
இந்த எட்டு பட்டியல்களில் சிலரது அனுபவங்கள் இந்தியப் பின்புலத்துக்குப் பொருந்தாதவை. இவர்களை விடுத்திருக்கிறேன்; பல இந்தியர்களை, தமிழர்களைச் சேர்த்திருக்கிறேன். நமக்குப் பொருந்தும் ஒரு புதிய பிசினஸ் முன்னோடிகள் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த இந்த பிசினஸ் மாமேதைகளை உங்கள் முன்னால் அழைத்துவருகிறேன். இவர்களைச் சந்தியுங்கள். இவர்களின் சாதனைகளை அசை போடுங்கள். உத்தரவாதம் தருகிறேன். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம்.
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago