ரஷ்யாவில் இருந்து அடுத்த இறக்குமதி: கச்சா எண்ணெயை தொடர்ந்து சூரியகாந்தி: சலுகை விலையில் வாங்க விரைவில் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

மும்பை: கடந்த மே மாதத்தில் இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தபோதிலும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி மே மாதத்தில் 67,788 டன்னிலிருந்து 123,970 டன்னாக உயர்ந்துள்ளது. இதில் பெருமளவு ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் தாண்டி கச்சா எண்ணெயை தொடர்ந்து தற்போது சூரிய காந்தி எண்ணெயையும் இந்தியா இறக்குமதி செய்கிறது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்தது. மலேசியோ, இந்தோனேசியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய பாமாயிலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடான இந்தோனேசியா, உள்நாட்டில் அதிகரித்து வரும் பாமாயிலின் விலையை கட்டுப்படுத்த ஏப்ரல் 28 அன்று ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

பாமாயில் இறக்குமதி

இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்பட்டது. இதன் பாதிப்பும் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. பெருமளவு பாமாயில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனினும் இந்தோனேசிய பாமாயிலுக்கு மாற்றாக வேறு பல நாடுகளில் இருந்து இந்தியா சமையல் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. மலேசியா, தாய்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகஅளவு பாமாயில் இறக்குமதியாகியுள்ளது.

இதன் மூலம் கடந்த மே மாதத்தில் ஏழு மாதங்களில் மிக அதிகமாகவும், ஏப்ரல் மாதத்தில் 15% அதிகமாகவும் பாமாயில் இறக்குமதி இருந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா அதிகமாக மலேசியாவில் இருந்து கொள்முதல் செய்துள்ளது. சராசரி மதிப்பீட்டின்படி மே மாதத்தில் 660,000 டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்துள்ளது, இது ஏப்ரல் மாதத்தில் 572,508 டன்னாக இருந்தது.

இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி மே மாதத்தில் சரிந்தது. ஆனால் மலேசியா, தாய்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியாவில் இருந்து அதிகமாக வாங்க முடிந்ததாக தாவர எண்ணெய் தரகு மற்றும் ஆலோசனை நிறுவனமான சன்வின் குழுமத்தின் தலைமை நிர்வாகி சந்தீப் பஜோரியா தெரிவித்துள்ளார்.

மே 23 முதல் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க இந்தோனேசியா அனுமதித்தது. ஆனால் உள்நாட்டு விநியோகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கினாலும் மலேசியா கடும் போட்டியை அளித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க சோயா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் மாதத்தில் 315,853 டன்னிலிருந்து 352,614 டன்னாக உயர்ந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் இது கடுமையாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியா 2 மில்லியன் டன் சரக்குகளுக்கு வரியில்லா இறக்குமதியை அனுமதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மும்பையைச் சேர்ந்த வர்த்தக நிறுவன டீலர் ஒருவர் தெரிவித்தார்.

சூரியகாந்தி எண்ணெய்

இத்துடன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் மே மாதத்தில் 67,788 டன்னிலிருந்து 123,970 டன்னாக உயர்ந்துள்ளது. இந்தியா முக்கியமாக அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகியவற்றிலிருந்து சோயா எண்ணெயையும், ரஷ்யாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயையும் வாங்கியுள்ளதாக தெரிகிறது. அதுவும் குறிப்பாக ரஷ்யாவில் இருந்து அதிகமான சூரிய காந்தி இறக்குமதிக்கு வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் இருந்து சப்ளை நிறுத்தப்பட்டதை அடுத்து, உள்ளூர் சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்ததால், ஏப்ரல் மாதத்தில் 45,000 டன் ரஷ்ய சூரியகாந்தி எண்ணெயை இந்தியா வந்துள்ளது. தொடர்ந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருவதால் வரும் நாட்களில் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி

கச்சா சூரியகாந்தி எண்ணெயை ஒரு டன்னுக்கு 2,150 டாலர்கள் என்ற விலையில் வாங்கினர். இது ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்பு 1,630 டாலராக இருந்தது. விலை அதிகமாக உள்ளபோதிலும் கூட தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்பதால் ரஷ்யாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் தொடர்ந்து இறக்குமதியாகும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. தற்போது தடையை தாண்டி சமையலுக்கு பயன்படும் சூரிய காந்தி எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

சலுகை விலையில் இறக்குமதி?

இதுமட்டுமின்றி கச்சா எண்ணெயை போலவே சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் சலுகைகளைப் பெற ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 31 வரை ரஷ்யா சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்கு சிறப்பு சலுகை விலைகளைப் பெற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஏனெனில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் 31 வரை 1.5 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியகாந்தி எண்ணெயின் தேவை குறித்து இந்திய முன்பே ரஷ்யாவிடம் தெரிவித்திருந்தது. ஆனால் உக்ரைனுடனான போர் காரணமாக அந்த பேச்சுவார்த்தை மேற்கொண்டு நடைபெறவில்லை. தற்போது கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் அதனைத் தொடர்ந்து சூரிய காந்தி எண்ணெய் பெறுவதிலும் சலுகைகளை இந்தியா எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்