புதுடெல்லி: கரோனா தொற்றுநோய், பொருளாதார சிக்கல்களை சந்தித்து உலகம் மீண்டு எழுந்து வரும்நிலையில் பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மெல்ல மீண்டும் வரும் நிலையில் தற்போது பல்வேறு நாடுகளும் புதிய சிக்கல் ஒன்றை சந்தித்து வருகிறது. பொருளாதார சுழற்சியால் பொருட்களின் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்கால் உணவுப்பொருட்கள் தொடங்கி பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
சமையல் எண்ணெய், தொடங்கி கோதுமை, சர்க்கரை என பல உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார சிக்கல் உருவாகி வருகிறது. இதனால் பல நாடுகளில் பணவீக்கம் ஏற்பட்டு பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் உலகளாவிய பொருளாதார சிக்கலை அதிகரித்துள்ளது. இதுபோலவே சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் மேலும் தீவிரமாகியுள்ளது.
» சென்னை | மனைவி, குழந்தைகளை கொன்று ஐடி ஊழியர் தற்கொலையா? - காவல் ஆணையர் ரவி விளக்கம்
» பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு: சிறப்பு பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என பெரும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இலங்கையை போன்றே வேறு சில நாடுகளிலும் இதேபோன்ற பொருளாதார பாதிப்பு, கடன் சுமை ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்குவதற்கு 9 நாட்களுக்கு முன்பாக உலக வங்கி மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 70 நாடுகள் பெரும் கடன் சுமை, அந்நியச் செலாவணி இழப்பு போன்ற சூழலில் இருப்பதாக தெரிவித்து இருந்தது.
திவாலாகும் நாடுகள்
இந்த நாடுகளில் 2022-ம் ஆண்டில் இந்த நாடுகளில் பொருளாதாரம் அழியும் சூழலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 107 நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான சூழலில் உள்ளதாக ஐ.நா.வும் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும், கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் விலை அதிகரிக்கும். கடன் சுமையால் இந்த நாடுகளில் நிதிநிலை மோசமாகும் என்றும் தெரிவித்துள்ளது.
170 கோடி மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. இதில் 69 நாடுகளில் இலங்கையின் நிலையில் உள்ளன. எகிப்து, துனிஷியா, துருக்கி, லெபனான், அர்ஜென்டினா, எல்சால்வெடர், பெரு, கானா, கென்யா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா போன்ற நாடுகளும் இதுபோன்ற மோசமான பொருளாதார சூழலை எதிர்கொண்ட வருகின்றன.
இந்த நாடுகள் அடுத்த 12 மாதங்களில் மிகப்பெரிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், 10-க்கும் மேற்பட்ட நாடுகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு நிலை, தற்போதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
அச்சத்தில் அமெரிக்கா
பொருளாதார மந்தநிலை என்பது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவை சந்திக்கும்போது ஏற்படும் தேக்கமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அளவிடக் கூடிய ஒரு அளவுகோல் ஆகும். உதாரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தால் அது பொருளாதார சரிவு என கருதப்படும். இந்த அடிப்படையில் பார்த்தால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது சரிவாகவே உள்ளது. எனவே மந்தநிலை தொடங்கி விட்டதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதே நிலை தான் உள்ளது. அமெரிக்காவிலுள்ள 80% க்கும் அதிகமானோர் இந்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்று மொமென்டிவ் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களில் 91% மந்தநிலை ஏற்படப் போகிறது என்ற அச்சத்தில் உள்ளனர். அதே நேரத்தில், 88 சதவீதம் பேர் நாட்டில் நிதி நெருக்கடி, பொருளாதார மந்தநிலை மீண்டும் வருமோ என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
அமெரிக்காவில் மந்தநிலை பற்றிய மக்களின் அச்சம் பொருட்களின் விலை உயர்வு காரணமாக எழுந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போனால், மக்கள் டாலர்களை செலவழிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்றும், மந்தநிலை ஆபத்து உருவாகும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
பிரிட்டன்
இதுபோலவே பிரிட்டனில் பணவீக்கம் 40 ஆண்டுகாலத்தில் இல்லாத வகையில் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பயம் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் கடந்த மார்ச் மாதத்திலேயே பணவீக்கம் அதிகரித்து 7 சதவீதமாக உயர்ந்திருந்தது. ஏப்ரலில் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ,
இன்போசிஸ்’ நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனும் பிரிட்டனின் நிதியமைச்சருமான, ரிஷி சுனாக் கூறுகையில் ‘‘எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஏப்ரலில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த உலகளாவிய சவால்களிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்க முடியாது. ஆனால், எங்களால் முடிந்த வரை, எங்கு முடியுமோ, அங்கு ஆதரவை தருகிறோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மேலும் நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்’’ எனக் கூறினார்.
இருந்தாலும் ஒப்பீட்டு அளவில் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருந்தாலும், உக்ரைன் போர், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், சீனாவின் ஜீரோ கோவிட்-19 கொள்கைகள், பணவீக்கம், அமெரிக்காவின் மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்கள் 2022-ம் ஆண்டின் வளர்ச்சிப் போக்கை கட்டாயம் குறைக்கும். மோசமடைந்து வரும் இந்த நிலைமைகள், சரியாக ஆராய்ந்து பார்க்காமல் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள், தற்போதைய நிலையை மேலும் தீவிரமாக்குமா என்பதையும் கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் என்ன நிலை?
இந்தியாவை பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் மந்தநிலை அறிகுறிகள் இங்கும் உள்ளதா என்ற கேள்வி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாகச் சரிந்தது. அதேபோல, இந்த நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நுகர்வு பெரும்பங்கு வகிக்கிறது. இது இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் 5-இல் மூன்று பங்கு பங்களிப்பைக் கொண்டுள்ளது. நுகர்வில் மந்தநிலை ஏற்படும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் மக்களிடையே நுகர்வு சக்தி வெகுவாகக் குறைந்துள்ளதாகவே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு கார்கள் விற்பனை, இரு சக்கர வாகனங்கள் விற்பனை, டிராக்டர்கள் விற்பனை, வணிக வாகனங்கள் விற்பனை ஆகியவை வெகுவாகக் குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எப்எம்சிஜி நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களின் விற்பனை அளவு, கடந்த ஓராண்டில் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால் இவையெல்லாம் பொருளாதார மந்தநிலையின் அறிகுறியா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில் உணவுப்பொருட்கள் உட்பட வேறு சில பொருட்களின் தேவை அதிகரித்து அதன் விலையும் உயர்ந்து வருகிறது.
எனவே நுகர்வு என்பது முற்றிலும் குறைந்து விட்டதாக கருத முடியாது என்பது ஒரு சில பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மொத்தத்தில் பொருளாதார மந்தநிலை என்பது ஏற்பட்டு விட்டதாக கருத முடியாது. அதேசமயம் மந்தநிலை வராது என்பதையும் உறுதியிட்டு கூற முடியாது என்பதும் பொருளாதார ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago