புதுடெல்லி: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அந்த நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது. இது இந்திய தேயிலைக்கு குறிப்பாக தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர்களுக்கு பெருமளவு கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் அந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி வணிகப் பயிரான தேயிலையை கடுமையாக பாதித்துள்ளது. இயற்கை விவசாயம் என்ற இலங்கை அரசின் உத்தரவால் ஏற்கெனவே அந்நாட்டில் தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு காரணமாக தேயிலை தூள் தயாரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மரபுவழி தேயிலை
தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் உரம் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை, தேயிலை அறுவடை செய்வோரைப் பெரிதும் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தேயிலை உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 18 சதவீதம் சரிந்தது.
இதனால் இலங்கையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெரும் சரிவு கண்டது. இலங்கை ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்கிறது. இலங்கை நீண்டகாலமாகவே மரபுவழி தேயிலையான ஆர்த்தடாக்ஸ் தேயிலை உற்பத்தியாளராக உள்ளது. இலங்கை தனது உற்பத்தியில் 97-98 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது.
இலங்கை மரபுவழி தேயிலையின் மொத்த உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வருவாயை அது பெற்றுத் தந்தது. ஆனால், இலங்கையில் நிலவிவரும் தற்போதைய பொருளாதார நெருக்கடி, தேயிலை ஏற்றுமதிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தேயிலை ஏற்றுமதி 63.7 மில்லியன் கிலோவாக குறைந்தது. கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏற்றுமதி 69.8 மில்லியன் கிலோவாக இருந்தது. 1999ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்குப் பிறகு, தேயிலை ஏற்றுமதி இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதன்முறை. 1999ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 60.3 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
தென்னிந்தியாவுக்கு வாய்ப்பு?
உலகளாவிய தேயிலை சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கக்கூடும் எனத் தெரிகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் ஆர்த்தடாக்ஸ் தேயிலை கணிசமாக உற்பத்தியாகிறது.
இதுகுறித்து இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கனோரியா கூறியதாவது:
இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக இந்த ஆண்டு 15 சதவீதம் விளைச்சல் குறையும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். உரம், டீசல் மற்றும் பிற உற்பத்திக்கு தேவையான பொருட்களின் பற்றாக்குறை அதன் உற்பத்தியை மேலும் பாதிக்கும். இலங்கையில் உள்ள வர்த்தகர்கள் கண்டெய்னர்கள் பற்றாக்குறையால் ஏற்றும்தி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இலங்கை முக்கியமாக மரபுவழி தேயிலையை உற்பத்தி செய்கிறது. இது கையால் அறுவடை செய்யப்பட்டு பதப்படுத்தப்படும் ஆர்த்தடாக்ஸ் தேயிலை, ரஷ்யா மற்றும் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தேநீர் குடிப்பவர்களிடையே இது பிரபலமானது. ஆர்த்தடாக்ஸ் தேயிலைக்கு உற்பத்திச் செலவுகள் பொதுவாக அதிகமாக இருக்கும். ஆனாலும் அந்த நாட்டு மக்களின் விருப்பமாக இலங்கை தேயிலை உள்ளது.
உயரும் விலை?
இந்திய மற்றும் இலங்கை மரபுவழி தேயிலைகள் ரஷ்யாவில் பிரபலமாக உள்ளன. இந்திய ஆர்த்தடாக்ஸ் தேயிலைக்கான தேவை இலங்கையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் அதிகரிக்கக்கூடும். இருப்பினும் இலங்கை தேயிலைக்கு என தனியாக மார்க்கெட் உள்ளது. இலங்கை தேயிலை விலை 10-20 சதவீதம் உயர்ந்தபோதும் அதிக விலை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்தியாவைப் போலவே ரஷ்யாவும் இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். போர் காரணமாக வர்த்தகத்தை நிறுத்தி வைத்திருந்த ரஷ்ய வர்த்தகர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இது இலங்கை தேயிலையின் விலையை மேலும் உயர்த்தக் கூடும்.
ஒட்டுமொத்தமாக, இலங்கையில் தேயிலை விளைச்சல் பாதிப்பு, தேயிலை தயாரிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று வாரங்களில் தென்னிந்தியா ஓரளவுக்கு பயனடைந்துள்ளது. சில குறுகிய கால நன்மைகள் உள்ளன. ஆனால் இலங்கை பயன்படுத்தும் சர்வதேச தரம் மற்றும் பிராண்ட்டை விரும்பும் மக்களின் தேவையை தென்னிந்திய தேயிலை அவசரமாக மாற்ற முடியாது.
மேலும் இலங்கையைத் தவிர, சீனா, வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகியவை பல்வேறு முக்கிய தேயிலை உற்பத்தியாளர்களாக உள்ளன. ஆனால் சீனா ஆர்த்தடாக்ஸ் வகை தேயிலை ஏற்றுமதி செய்வதில்லை. ஏனெனில் உள்நாட்டிலேயே அதற்கு அதிகமான தேவை உள்ளது.
இந்தியா சுமார் 110 மில்லியன் கிலோ ஆர்த்தடாக்ஸ் தேயிலையை உற்பத்தி செய்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகம் உற்பத்தியாகிறது. அதில் 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையின் உயர் ரகத்துடன் நமது தேயிலை போட்டியிடும் சூழல் இல்லை. எனினும் சரிந்து போன அதன் 35 சதவீத உற்பத்தியில் ஓரளவை இந்தியா பங்களிக்க கூடும் என தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2021-ம் ஆண்டில் 6.8% குறைந்து 195.5 மில்லியன் கிலோவாக இருந்தது. 2019 இல் மொத்த ஏற்றுமதி 252.15 மில்லியன் கிலோவாக இருந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
3 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago