கோவை/திருப்பூர்/ஈரோடு/கரூர்/தேனி/விருதுநகர்: நூல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் நூல் வர்த்தகர்கள், பின்னலாடை நிறுவனங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நேற்று சுமார் ரூ.650 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நாட்டில் பருத்தி விலை கண்டி ஒன்றுக்கு (355 கிலோ) ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக தற்போது உயர்ந்துள்ளது. மத்திய அரசானது இறக்குமதி பஞ்சுக்கான 11 சதவீத வரியை வரும் செப்டம்பர் இறுதி வரை நீக்கியுள்ள நிலையிலும், உள்நாட்டில் பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருத்தி விலை உயர்வால் நூல் உற்பத்தியாளர்கள் தொடங்கி, கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை என ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள அனைவரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இவற்றோடு ஆலைகளிடம் இருந்து நூலை வாங்கி விற்பனை செய்யும் உள்நாட்டு நூல் வர்த்தகமும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் உள்ள நூல் வர்த்தகர்கள் சார்பில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.இதனால், கோவை தெப்பக்குளம் மைதானம், பூ மார்க்கெட் பகுதிகளில் உள்ள நூல் வர்த்தக நிறுவனங்கள் நேற்றும் மூடப்பட்டிருந்தன.
இதுகுறித்து கோவை நூல் வர்த்தகர்கள் மற்றும் தரகர்கள் சங்க செயலாளர் நேரு ராமநாதன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
கோவையிலிருந்து பெரும்பாலும் கைத்தறி, விசைத்தறி ரகங்களுக்கே அதிகளவில் பருத்தி நூல் வர்த்தகம் நடைபெறுகிறது. ஈரோடு, சேலம், கரூர் போன்ற கொங்கு மண்டல மாவட்டங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. பருத்தி பஞ்சு விலை உயர்வால் கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் 100% அளவுக்கு நூல் விலை உயர்ந்துள்ளது.
நாங்கள் ஆர்டர் அளிப்போரிடம் ஒரு விலையைக் கூறி ஆர்டர் எடுத்தால், அந்த ஆர்டர் எங்களது கைக்கு வர ஒரு வாரம் ஆகும். அதற்குள் நூல் விலை அதிகரித்து விடுகிறது. இதனால் எடுத்த விலையில் ஆர்டரை விநியோகம் செய்ய, கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது. இதனால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நூல் ஏற்றுமதியைதடை செய்தால் உள்நாட்டில் பற்றாக்குறை தீர்ந்து, பரவலாக நூல் கிடைக்கும்போது விலை குறையும் என்றார்.
இதேபோன்று, திருப்பூரில் நேற்று 2-ம் நாளாக காதர்பேட்டை மற்றும் லட்சுமி நகர் பகுதிகளில் கடைகள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மூடியிருந்ததால், அப்பகுதி வெறிச்சோடியது.90 சதவீதத்துக்கும் அதிகமான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 2-ம் நாள் போராட்டத்திலும் பங்கேற்றன. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறிகளும் இயங்கவில்லை.
ஈரோடு, கரூரில் போராட்டம்
இதேபோன்று, ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி, விற்பனை மற்றும் ஜவுளி சார்ந்த தொழிற்கூடங்கள் சார்பில் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற கடையடைப்பில் 25 சங்கங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஜவுளி மற்றும் சார்பு நிறுவனங்கள் கலந்து கொண்டன.
கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் நூல் வர்த்தகர்கள் சங்கம், கரூர் வீவிங் நிட்டிங் ஓனர்ஸ் அசோசியேசன், கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர் சங்கம் ஆகியவை நேற்று முன்தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், நேற்று ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதேபோன்று, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களும், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் 2 நாட்களாக இயங்கவில்லை. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இயங்கி வரும் சுமார் 3 ஆயிரம் விசைத்தறிகளும் நேற்று இயங்கவில்லை.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தால் நேற்று சுமார் ரூ.650 கோடிக்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக ஜவுளித்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
வணிகம்
4 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago