புதுடெல்லி: உலகளாவிய சூழலால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை விண்ணை தொட்டும் வரும் நிலையில் முக்கிய உணவுப்பொருளான கோதுமை விலையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் விலையேற்றத்துக்கான காரணம் மற்றும் அது எப்போது குறையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.
உலக அளவில் சமையல் எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதியை பொறுத்தவரையில் 13 மில்லியன் டன்களாாகும். உலக அளவில் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
இந்தநிலையில் சமையல் எண்ணெயை தொடர்ந்து இந்தியாவில் கோதுமை மற்றும் கோதுமைப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. உலக அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி கடந்த 2 மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் கோதுமைக்கான தேவை உயர்ந்து விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்றுமதி வாய்ப்பால் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு கோதுமையை வாங்குவதால் விவசாயிகள் அரசு கொள்முதலுக்கு தருவதை குறைத்துக்கொண்டனர். இதனால் அரசின் கையிருப்பும் ஒரளவு குறைந்துள்ளது.
ரேஷன் விநியோகம்
பிரதான் மந்திரி கரிப் அன்ன கல்யாண் யோஜனா திட்டத்தை 2022 செப்டம்பர் வரை நீட்டித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி மத்திய அரசிடம் 190 லட்சம் டன் கோதுமை இருப்பு இருந்தது.
இந்த ஆண்டு 195-200 லட்சம் டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. முந்தைய கொள்முதல் மூலம் மிச்சம் இருக்கும் கோதுமையின் அளவை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கோதுமை வாங்கும் நிலை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.
கோதுமை விலை உயர்வுக்கு உலகளாவிய காரணங்களும் உள்ளன. பிப்ரவரி இறுதியில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகில் இந்தியாவின் கோதுமைக்கான தேவை மேலும் அதிகரித்தது. கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
உக்ரைன் போர்
உலக அளவில் கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை வாங்கும் பல நாடுகள் மற்ற நாடுகளை நாடின. உலகில் கோதுமை ஏற்றுமதி செய்யும் முதல் 5 நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஏற்றுமதியில் முப்பது சதவிகிதம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது.
ரஷ்யாவின் கோதுமையில் பாதியை எகிப்து, துருக்கி மற்றும் வங்கதேசம் வாங்குகின்றன. உக்ரைனில் இருந்து எகிப்து, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், துருக்கி, துனிசியா ஆகிய நாடுகள் கோதுமை வாங்குகின்றன.
கோதுமை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்யா- உக்ரைன் இரண்டு நாடுகளும் போரில் சிக்கியுள்ளன. இதனால் அவற்றின் வழக்கமாக கோதுமை வாங்கும் நாடுகள் வேறு நாடுகளை தேடும் சூழல் ஏற்பட்டது.
போர் தொடங்கி சில வாரங்களுக்குப் பிறகு கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது வாய்ப்பாக பார்க்கப்பட்டது. இதனால் இந்திய விவசாயிகள் பலனடைவார்கள் என்று மத்திய அரசும் தெரிவித்து இருந்தது.
வாய்ப்பு தவிப்பாக மாறியது
எகிப்து உள்ளிட்ட பலநாடுகள் இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்தது. இந்தியா தனது கோதுமை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவற்காக மொராக்கோ, துனிசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், துருக்கி, அல்ஜீரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு வர்த்தகப் பிரதிநிதிகளை அண்மையில் அனுப்பியிருந்தது.
நடப்பு நிதியாண்டில் கோதுமை ஏற்றுமதியை ஒரு கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் இந்த புதிய சூழலால் எதிர்பார்த்த இலக்கையும் தாண்டி கோதுமை ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அரசு வைத்து இருந்தது.
ஆனால் இது வாய்ப்பாக இருந்தநிலையில் இதுவே இடையூறாக மாறியுள்ளது. ஆம் இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடபகுதிகளில் கோதுமை சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. மத்திய இந்தியாவிலும் அதிக உற்பத்தி உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோதுமை அறுவடை செய்யப்படுகிறது.
இந்தியாவில் மகசூல் பாதிப்பு
இந்த ஆண்டு வட இந்தியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரலாறு காணாத வெப்பம் நிலவியது. இதனால் கோதுமை விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோதுமை விளைச்சல் சுமார் 5 சதவிகிதம் குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் இந்த முறை கோதுமை மகசூல் 15-25 சதவிகிதம் குறைந்துள்ளது.
100 கிலோ ஆட்டாவின் விலை ரூ.2,400க்கு விற்பனையாகி வருகிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பின் இத்தகைய விலை உயர்வு தற்போது தான் ஏற்பட்டுள்ளது. கோதுமையை தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிற நாடுகளின் கோரிக்கைக்களுக்கு ஏற்ப அங்கு கோதுமைக்கு தேவை இருப்பின் மட்டுமே, மத்திய அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு காரணமாக இந்த ஏற்றுமதி தடை உத்தரவை பிறப்பிக்கும் சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக உள்நாட்டுச்சந்தையில் கொள்முதலுக்கு கோதுமை குறைவாகவே காணப்படுகிறது. மேலும் விலை உயரும் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் கையிருப்பு வைத்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசும் அதிகமான விலையில் கோதுமை கொள்முதல் செய்கிறது.
இதனால் சந்தைக்கு வரும் கோதுமை அளவும் குறைவாக உள்ளது. இந்த சூழல் அடுத்த சில நாட்களுக்கும் நீடிக்கும் என்ற தெரிகிறது. எனவே சந்தை சூழலை பார்த்தால் சில காலம் வரை கோதுமை விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
13 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago