வணிக நூலகம்: சந்தோஷத்தை விலைக்கு வாங்கலாம்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

“பணத்தால் நிம்மதியை வாங்க முடியாது. பணம் வந்தால் நிம்மதி போய்விடும்” என்ற சினிமா வசனம் நிறைய கேட்டிருக்கிறோம். அதுவும் பணக்கார நடிகர்கள் தான் அதிகம் பேசியிருக்கிறார்கள்.

பணம் வந்தால் வாழ்க்கை தறி கெட்டு விடும் என்ற எண்ணம் மத்திய தர குடும்பங்களில் விதைக் கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் “பணமா பாசமா” என்று ஒரு படமே வந்தது. வில்லன்கள்தான் பணக்காரர்களாக இருந்தார்கள். (அவர்களின் அழகான மகள்கள் ஏழை நாயகர்களைத் தான் காதலிப்பார்கள்; அது வேறு விஷயம்!)

பணக்காரர்கள் தவறான வழியில் பணம் சேர்ப்பார்கள். நல்லவர்களின் குடும்பங்களை பிரிப்பார்கள். பணத்திற்காக எதையும் செய்வார்கள். இது தான் நம் படங்கள் சொல்லி வந்தவை.

பணம், குணம், நிம்மதி, சந்தோஷம் அனைத்தும் எளிதில் பொதுமைப்படுத்த முடியாத விஷயங்கள் என்று காலப்போக்கில் புரிகிறது. கிட்டத்திட்ட எல்லோரும் பணம் சம்பாதிக்கவே வாழ்க் கையில் பெரும் காலம் செலவு செய்கிறார்கள். பணம் வந்தால் சந்தோஷம் என்பதை விட பணம் சம்பாதிக்காவிட்டால் சோகம் என்று புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் பணம் சம்பாதிக்க சம்பாதிக்க சந்தோஷங்கள் அதிகமாவதில்லை என்று தெரிகிறது. மாறாக குறையவும் செய்கிறது. எது சந்தோஷம் எனும் தேடலில் வாழ்க்கை முடிகிறது.

சம்பாதிப்பது எவ்வளவு இருந்தாலும் அதை நீங்கள் செலவு செய்யும் வழியில் தான் சந்தோஷம் இருக்கிறது என்று பின் அட்டையில் படித்த போது இந்த புத்தகம் வாங்கலாம் என்று முடிவு செய்தேன். Happy Money எனும் புத்தகத்தை வாங்கியது இப்படித்தான்.

எலிசபெத் டன் மற்றும் மைக்கேல் நார்ட்டன் எழுதிய புத்தகம் இது. முன்னவர் சமூக உளவியல் பேராசிரியர். பின்னவர் நிர்வாகப் பேராசிரியர். இருவரும் பல ஆய்வுகளை மேற்கொண்டும் மேற்கோள்கள் காட்டியும் எழுதியுள்ள புத்தகம். இருவரும் ஏமாற்றவில்லை என்பது புத்தகம் படித்ததும் தெரிந்தது.

ஐந்து விஷயங்களை தெளிவாகச் சொல்கிறார்கள்.

ஒன்று, பொருட்களை விட அனுபவங்களுக்கு செலவு செய்யுங்கள். சொந்த வீடு வைத்திருப்பவர்களை விட சொந்த விடு இல்லாதவர்கள் சந்தோஷமாக் இருக்கிறார்கள் (அதே பொருளாதாரத் தட்டில்) என்கிறார்கள். வீடு கட்டுவதற்குள் குணம் கெட்டுவிடும். ஆசையாகத் தோன்றிய வீட்டில் கட்டி முடிந்த பின் ஆயிரம் கோளாறு தெரியும். இதுபோலத்தான் எல்லா பொருட்களும். வாங்கும்போது கவர்ச்சியாகத் தெரியும் எதுவும் மிக விரைவிலேயே வீணாகக் கிடக்கும். குறைந்தபட்சம் அந்த சந்தோஷமும் கவர்ச்சியும் விலகிப் போகும்.

ஆனால் அனுபவங்கள் அப்படி அல்ல. இமயமலைப் பயணமோ, இசை ஞானி நிகழ்ச்சியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கெடுப்போ, கூட்டுப் பிரார்த்தனையோ, ஆழ்கடல் குளியலோ.. இதற்கு செலவு செய்தவை நினைத்து நினைத்து நீண்ட காலம் நினைவில் நிற்பவை என்கிறார்கள். அடுத்த முறை மகனுக்கு எல்க்ட்ரானிக் கருவி வாங்குவதற்கு பதில் ஒரு அடர்ந்த காட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லுங்கள். அது அதிக மகிழ்ச்சி தரும்.

இரண்டு, எதையும் “ஸ்பெஷல்” என்று நினைத்து செய்தால் அது மகிழ்ச்சியை அளிக்கும். திருவாரூர்காரர்கள் தேர் பார்க்க மாட்டார்கள். “இங்க தானே இருக்கு?” மனோபாவம். நம் வாழ்க்கையில் உள்ள பல ஸ்பெஷல் விஷயங்களாய் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்- அது எளிதாகக் கிடைப்பதால். காபியை முழுவதுமாக விடுவதை விட எப்போதாவது குடித்தால் மிகுந்த ருசியாக இருக்கும். சில தட்டுபாடுகளும் தடைகளும் நம் அனுபவங்களை அதிகம் இனிக்க வைக்கின்றன. “குறுகிய கால விற்பனை” என்பதன் தந்திரம் இதுதான்.

அமெரிக்காவிலிருந்து வந்திருக்கா, 10 நாள் தான் இருப்பா என்றால் ஓடிப் போய் இரவு முழுவதும் பேசுவோம். இங்குள்ள உறவுக்காரரை என்றாவது நிதானமாகப் பார்க்கலாம் என்று வருடக்கணக்கில் தள்ளிப் போடுவோம். இந்த ப்ரீமியம் தன்மை தான் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

“ஒரு அதிரசம் தான் இருக்கு. எல்லாம் தீர்ந்துடுச்சு. இந்தா நீ சாப்பிடு!” எனும் போது அந்த அதிரசம் அதிகம் இனிக்கிறது.

அதனால், எதையும் “ஸ்பெஷல்” ஆக்கப் பாருங்கள்.

மூன்று, நேர சேமிப்பிற்கு செலவு செய்யுங்கள். பண சேமிப்பை விட இது அதிக மகிழ்ச்சியைத் தரும்.

“சார், நீங்கள் வரிசையில் நிற்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்பவர் சற்று அதிகம் வாங்கினாலும் கொடுத்துவிடுகிறோம்.

அதுவும் நாம் செய்யப் பிடிக்காத விஷயங்களில் நேரம் போகுதென்றால் அதை சேமிக்கும் எந்த பொருளையும் / சேவையையும் நாம் மகிழ்ச்சியாக செல்வு செய்து வாங்குவோம்.

நீங்கள் பல் தேய்க்கும் நேரத்தில் ஸ்டாக் மார்க்கெட் செய்தி பார்க்கலாம். உங்கள் பற்களை நாங்கள் தேய்த்து விடுகிறோம் என்று சொல்லும் காலங்கள் வரலாம்!

நான்கு, முதலில் பணம் கொடுங்கள்; பின்னர் பொருட்களை வாங்குங்கள்.

இது இன்றைய நடைமுறைக்கு நேர் மாறானது. இப்போது பொருள் வாங்கி அனுபவித்து விட்டு பின் பணம் கட்டுகிறோம். கிரெடிட் கார்ட், ஈ.எம்.ஐ கலாச்சாரம் அப்படி செய்து விட்டது. அதனால் ஆசையுடன் வாங்கி அனுபவித்து விட்டு, பின் கவர்ச்சி இழந்து திட்டிக் கொண்டே காசு கொடுக்கிறோம்.

முன்பு பணம் கட்டி காத்திருப்பார்கள். பொருளின் அருமை தெரிந்தது என்கிறார். பணம் கட்டி விட்டால் அதற்கு காத்திருக்க ஆரம்பிப்போம் என்கிறார். இன்றும் புல்லட் வண்டியின் மவுசு இதனால் தான்.

ஐந்து, பிற மனிதர்களுக்கு செய்யும் செலவுதான் நிஜமான சந்தோஷம் கொடுக்கிறது.

பில் கேட்ஸும் வாரன் பஃபெட்டும் தன் 99% சொத்தை தானமாக கொடுத்ததைத்தான் உண்மையான சந்தோஷம் என்கிறார்கள். வாரன் பஃபெட் முகத்தில் அப்படி ஒரு தேஜஸைப் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு, பெற்றோர் களுக்கு, உறவுக்காரர்களுக்கு, சமூகப் பணிகளுக்கு என தனக்கில்லாமல் செய்யும் ஒவ்வொரு செலவும் மனதுக்கு திருப்தியானவை என்கிறார்கள்.

இன்று பல தொழிலகங்களில் தங்கள் பணியாளரை இப்படி சி.எஸ்.ஆர் போன்ற காரியங்களில் ஈடுபடுத்துவது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தத்தான் என்று ஆராய்ச்சிக் குறிப்புகளோடுச் சொல்கிறார்கள்.

மொத்ததில் புத்தகம் தரும் முக்கிய பாடம்: சந்தோஷத்தை விலைக்கு வாங்கலாம். பொருட்களாக அல்ல. அனுபவங்களாக வாங்குங்கள்.

காலங்காலமாக நினைவில் நிற்கும் அனுபவங்களைப் பெற பணம் செலவு செய்யுங்கள். மகிழ்ச்சி நிலைக்கும்.

gempa.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்