இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் ஆபத்து: பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை

By செய்திப்பிரிவு

மும்பை: உலக அளவில் பாமாயில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தோனேசியாவில் உற்பத்தி குறைவால் உள்நாட்டிலேயே பற்றாக்குறை ஏற்பட்டு பாமாயில் ஏற்றுமதிக்கு வரும் 28-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இதனால் அதிகஅளவு பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியாவில் அதன் விலை கடுமையாக அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் உலகம் முழுவதுமே சமையல் எண்ணெய் விலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

உலக அளவில் சூரிய காந்தி எண்ணெய் வர்த்தகம் 80% உக்ரைன் மற்றும் ரஷ்யாவையே அதிகம் சார்ந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக சூரிய காந்தி எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த தடையின் காரணமாகவும் எண்ணெய் வர்த்தகம் மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.

இதுபோலவே சோயாபீன் எண்ணெய் தட்டுப்பாடும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தென் அமெரிக்காவில் நிலவும் வறட்சியான சூழலும் இதற்கு ஒரு முக்கிய காரணம். பிரேசில், அர்ஜெண்டினா மற்றும் பாராகுவே நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சோயா எண்ணெய் அளவு 9.4% ஆக குறைந்துள்ள்ளது. கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைவான உற்பத்தி இதுவாகும்.

பாமாயில் உற்பத்தி பாதிப்பு

இந்தநிலையில் உலக அளவில் மற்றொரு முக்கிய சமையல் எண்ணெயான பாமாயில் உற்பத்தியிலும் சிக்கல் நிலவுகிறது. இதனை அதிகமாக உற்பத்தி செய்யும் மலேசியா, இந்தோனேசியாவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மற்ற எண்ணெய்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் உள்நாட்டிலேயே பாமாயில் நுகர்வு அதிகரித்துள்ளது.

இதனால் இந்தோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்ததுடன் விலையையும் கணிசமாக உயர்த்தியது. இந்தோனேசியா கடந்த மார்ச் மாதம் பாமாயிலின் மீதான அதன் சில்லறை விலை உச்சவரம்பை தளர்த்தியது. அத்துடன் ஏற்றுமதியாளர்கள் 30% உள்நாட்டு சந்தை விற்பனைக் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. மேலும் ஏற்றுமதி வரியையும் கணிசமாக உயர்த்தியது. ஒரு டன்னுக்கு 175 டாலரில் இருந்து 375 டாலராக உயர்த்தியது.

இந்தோனேசியாவிலிருந்து 8.3 மில்லியன் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் மொத்த பாமாயில் இறக்குமதியில் 50 சதவீதமாகும். இதனால்இந்தோனேசியாவின் இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்து சேரும் பாமாயில் விலையும் அதிகரித்தது.

15 கிலோ எடை கொண்ட பாமாயில் டின் ரூ 1,900க்கு விற்பனையானது ஆனால் ரூ.2,350 ஆக உயர்ந்தது. சில்லரை விற்பனையில் லிட்டருக்கு 30 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனையடுத்து பாமாயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகக் குறைத்தது. இதனையடுத்து விலை சற்று கட்டுக்குள் இருந்தது.

28-ம் தேதி முதல் தடை

இதனிடையே பாமாயில் ஏற்றுமதிக்கு வரும் 28-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இதனால் அதிகஅளவு பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியாவில் அதன் விலை கடுமையாக அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி மே மாதம் முதல் 3 லட்சம் முதல் 3.25 லட்சம் டன்னாக குறைந்தால், பாமாயில் விலை கடுமையாக அதிகரிக்கும்.

ஏற்கெனவே ரஷ்யா உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் பாமாயில் விலையும் உயர்ந்தால் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்திய சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு அமைப்பின் தலைவர் அதுல் சதுர்வே கூறியதாவது:

“இந்தியாவில் ஏற்கெனவே சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, சூரிய காந்தி எண்ணெய் சப்ளை 2.50 லட்சம் டன்னிலிருந்து ஒரு லட்சம் டன்னாகக் குறைந்துவிட்டது. இதனால் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது.

இப்போது பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசியா நிறுத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE