இங்கிலாந்தில் 'இன்ஃபோசிஸ்' நாராயணமூர்த்தி மகள் அக்‌ஷதா சந்திக்கும் சிக்கல்: வரி சர்ச்சை விரட்டுவதன் பின்புலம்

By செய்திப்பிரிவு

’இன்ஃபோசிஸ்’ நாராயண மூர்த்தியின் மகளும், பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்‌ஷதா மூர்த்தி தொடர்பாக இங்கிலாந்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. Non-Domicile Status எனப்படும் குடியுரிமை இல்லாத அந்தஸ்து மூலமாக கோடிக்கணக்கான பணம் வரி ஏய்ப்பு செய்தார் என்பதே அந்த சர்ச்சை. குடியுரிமை இல்லாத அந்தஸ்து என்றால் என்ன, அக்‌ஷதா மூர்த்தி ஏன் குறிவைக்கப்படுகிறார் என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

அக்‌ஷதா மூர்த்தி யார்? - இந்தியாவின் பிரபல தொழிலதிபர் 'இன்ஃபோசிஸ்' நாராயணமூர்த்தி. இவரது ஒரே மகள் தான் இந்த அக்‌ஷதா மூர்த்தி. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ வரை படித்துள்ள அக்‌ஷதா, அங்கு தன்னுடன் படித்த சக மாணவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனது கணவருடன் இணைந்து டெக்ஸ்டைல் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை அக்‌ஷதா நடத்தி வந்தாலும், தந்தையின் இன்ஃபோசிஸ் நிறுவனமே அவருக்கான மூலதனம்.

2020ம் ஆண்டு நிலவரப்படி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 480 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் (0.93%) அக்‌ஷதா வசம் உள்ளது. இதன் அப்போதைய மதிப்பே சுமார் ரூ.4,200 கோடி. இப்போதைய மதிப்பு 4960 கோடி. சுருக்கமாக சொல்வதென்றால், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தனிப்பட்ட சொத்து (ரூ.3,400 கோடி) மதிப்பைவிட அக்‌ஷதாவுக்கே அதிக சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை தவிர அமேசான் இந்தியா போன்ற மற்ற ஆறு நிறுவனங்களிலும் அக்‌ஷதாவுக்கு குறிப்பிட்ட அளவு பங்குகள் உள்ளன.

இப்போது என்ன சிக்கல்? - தனது கணவர் ரிஷி சுனக் பிரிட்டன் நிதி அமைச்சர் என்கிற பொறுப்பில் இருந்தாலும், அக்‌ஷதாவை பொறுத்தமட்டில் பிரிட்டன் குடியுரிமை பெறாமல், Non-Domicile Status எனப்படும் குடியுரிமை இல்லாத அந்தஸ்துடன் அங்கு வசித்து வருவது தெரியவந்துள்ளது. இதில் சிக்கல் என்ன என்கிறீர்களா? இந்த Non-Domicile Status எனப்படும் குடியுரிமை இல்லாத அந்தஸ்து என்பது பிரிட்டனில் வெளிநாட்டு வருமானத்தின் மீதான வரியைத் தவிர்க்க பயன்படுத்தும் திட்டமாகும்.

அதாவது, இந்த திட்டம் மூலம் வேறு நாட்டில் நிரந்தர குடியுரிமை கொண்டு இங்கிலாந்து வசித்து வருபவர்கள் தங்களது வெளிநாட்டு வருமானத்திற்கு இங்கிலாந்தில் செலுத்த வேண்டியதில்லை. எனினும், இதுபோன்றவர்கள் இங்கிலாந்தில் சம்பாதிக்கும் பணத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

ரிஷி சுனக் 2020ல் பிரிட்டன் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகே அக்‌ஷதா இந்த குடியுரிமை இல்லாத அந்தஸ்தை பயன்படுத்தி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளார் என்று இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. அக்‌ஷதா இன்ஃபோசிஸ் பங்குகளில் இருந்து ஆண்டுக்கு 11.5 மில்லியன் பவுண்டுகளை டிவிடெண்ட் அல்லது லாபப் பங்கு தொகையாக பெறுகிறார். இங்கிலாந்து வரிச் சட்டங்களின்படி அக்‌ஷதா குடியுரிமை இல்லாத அந்தஸ்தை கொண்டிருப்பதால் இந்த லாபத் தொகைக்கான வரி செலுத்துவதில்லை. ஏனென்றால் இன்ஃபோசிஸ் தலைமையகம் இந்தியாவின் பெங்களூருவில் உள்ளது. மேலும் இந்திய மற்றும் நியூயார்க் பங்குச் சந்தைகளில் மட்டுமே இன்ஃபோசிஸ் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒருவேளை அக்‌ஷதா குடியுரிமை இல்லாத அந்தஸ்தை பெறாமல் இருந்திருந்தால் இந்நேரம், இங்கிலாந்து சுங்கத் துறைக்கு அவர் 4.4 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.43 கோடி வரை) வரி செலுத்த வேண்டிஇருக்கும். இங்கிலாந்தில் வசிக்கும் வரி செலுத்துவோர் தங்கள் நிறுவனத்தின் லாபத் தொகையில் 39.35 சதவீதம் வரி செலுத்துகின்றனர்.

ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசிக்கும் அக்‌ஷதா குடியுரிமை இல்லாத அந்தஸ்து மூலமாக இந்த வரியை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரிஷி சுனக் பிரிட்டன் நிதி அமைச்சர் என்ற முறையில் கரோனா தொற்றால் ஏற்பட்ட நிலையை சரி செய்ய இங்கிலாந்தில் புதிய வருமான வரி நிலைகளை அமல்படுத்தினார். இது 1940களுக்கு பிறகு இல்லாத வகையில் இங்கிலாந்தில் வரி செலுத்துபவர்கள் மீது மிக அதிக அளவு வரிச்சுமை என்று எதிர்கட்சிகளால் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அக்‌ஷதா மீதான குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அக்‌ஷதா மூர்த்தி ரியாக்‌ஷன் என்ன? - தனது செய்தித் தொடர்பாளர் மூலமாக இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அக்‌ஷதா மூர்த்தி, "நான் ஒரு இந்திய சிட்டிசன். இந்தியா தனது குடிமக்கள் ஒரே நேரத்தில் மற்றொரு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்க அனுமதிக்காது. எனவே, பிரிட்டிஷ் சட்டத்தின்படி, நான் குடியுரிமை அல்லாதவராகவே கருதப்படுவேன். நான் இங்கிலாந்தில் பெறும் வருமானத்துக்கு உரிய வரியை இங்கிலாந்தில் தவறாமல் செலுத்தியே வந்துள்ளேன். எனவே இந்த விவகாரத்தில் எந்தவொரு சட்டங்களும் விதிகளும் மீறப்படவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும், இங்கிலாந்து எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அக்‌ஷதாவின் கணவர் ரிஷி சுனக்கிற்கு எதிராக முன்னெடுத்து வருகின்றன. ரிஷி இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான லேபர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

ரிஷி சுனக் தனது மனைவி அக்‌ஷதாவின் செல்வங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம் கூட, ரஷ்யாவுடனான அக்‌ஷதாவின் குடும்ப வணிக தொடர்புகளுக்காக ரிஷி அவதூறுகளை எதிர்கொண்டார். அப்போது இன்ஃபோசிஸுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டு முடிவுகளில் அக்‌ஷதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். விளக்கம் அளித்தாலும் சில நாட்களிலேயே இன்ஃபோசிஸ் தனது ரஷ்ய அலுவலகத்தை அவசரமாக மூடியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்