கிருஷ்ணகிரியில் புளி விளைச்சல் அதிகரிப்பால் சந்தையில் விலை சரிவு: அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. எனவே, அரசே புளியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிகம், பேரிகை, தீர்த்தம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, மத்தூர், காவேரிப்பட்டணம், பர்கூர், ராயக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 2 லட்சத்தும் மேல் புளிய மரங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் டன்னுக்கு மேல் புளி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதை அடிப்படையாக கொண்டு கிருஷ்ணகிரி பழையபேட்டையில் புளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை சந்தை கூடும். இச்சந்தைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்தும் கர்நாடக, ஆந்திர மாநில எல்லையோர கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் புளியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இங்கு உள்ளூர் வியாபாரிகள் முதல் கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். புளியின் ரகத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து, ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில், நிகழாண்டில் புளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:

நிகழாண்டில், புளி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. விலை சரிவின் காரணமாக கிருஷ்ணகிரி புளி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த 24-ம் தேதி நடைபெற்ற சந்தையில் ஒரு கிலோ புளி ரூ.25 முதல் ரூ.35 வரை(கொட்டையுடன் தரத்தை பொறுத்து) விலை போனது.

விவசாயிகள் மரத்தில் இருந்து புளியை உலுக்கி, பொட்டு உரித்து சந்தைக்கு கொண்டு வருவதற்கு கிலோவுக்கு ரூ.30 வரை செலவாகிறது. சந்தையில் ஏலம் விடப்பட்டு, கமிஷன் கொடுக்க வேண்டும். சந்தையில் விலை குறைவாக கிடைப்பதால் வேதனையாக உள்ளது.

கடந்த வாரம் 17-ம் தேதி நடந்த சந்தையில் ரூ.5 கோடிக்கு புளி வர்த்தகம் நடைபெற்றது. தற்போது ரூ.1.50 கோடி வரைதான் வர்த்தகம் நடக்கிறது. இதேபோல, கடந்த ஆண்டு புளியை குளிர்பதன கிடங்குகளில் வைக்கப்பட்டதில், 40 சதவீதம் இருப்பு உள்ளது.

எனவே, தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து புளியை கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE