தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கு: கைதான சித்ரா ராமகிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை பகிர்ந்த புகாரில் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். அதன்பின், சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் பொறுப்பில் இருந்த போது, தேசிய பங்குச் சந்தையில் நிதி தொடர்பான முடிவுகள், நியமனங்கள் தொடர் பாக பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இமய மலையில் உள்ள சாமியார் ஒருவரின் ஆலோசனையின்படி என்எஸ்இ தொடர்பான முடிவுகளை சித்ரா ராமகிருஷ்ணா எடுத்ததாகவும், அவரிடம் என்எஸ்இ.யின் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் எப்ஐஆர் பதிவு செய்தனர். ஓபிஜி செக்யூரிட்டீஸ், அதன் நிர்வாக இயக்குநர் சஞ்சய் குப்தா, என்எஸ்இ அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பங்குச் சந்தையின் கம்ப்யூட்டர் சர்வர்களைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.

மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் பலரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையும் நடத்தினர்.

மேலும் சித்ரா ராமகிருஷ்ணா முன்னாள் சிஓஓ ஆனந்த் சுப்ரமணியன், ரவி நாராயண் ஆகியோர் வெளி நாடு செல்லவும் சிபிஐ தடை விதித்தது.
பின்னர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர்.

இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சித்ரா ராமகிருஷ்ணனை டெல்லியில் நேற்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு முதல் விசாரணை நடந்து வருகிறது.

என்எஸ்ஈ அமைப்பின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது வெறும் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய ஆனந்த் சுப்ரமணியனை 2013-ம் ஆண்டு 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் என்எஸ்இயின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார்.

இந்தப் பணிக்காலத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அனந்த் சுப்ரமணியன் இணைந்து பல மோசடிகள், முறைகேடுகளைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாகச் சர்வர் பயன்பாட்டைச் சில முக்கிய வர்த்தகர்களுக்கு மறைமுகமாக அளிக்கப்பட்ட முறைகேடு முக்கிய புகாராகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE