‘‘எனக்கு வேண்டாம் இந்த பதவி’’- ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி இல்கர் ஐசி திடீர் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட இல்கர் ஐசி, திடீரென அந்த பதவி வேண்டாம் என மறுத்துள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது. இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய டாடா குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்படுவதாக டாடா அறிவித்தது.

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி. கடந்த 1971-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இல்கர் ஐசி பிறந்தார். 1994-ம் ஆண்டு பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல், பொதுநிர்வாகம் பயின்ற ஐசி, அரசியல் அறிவியல் பாடம் பயின்றவர் ஆவார்.

மர்மரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த முதுகலைப்படிப்பையும் அவர் முடித்துள்ளார். இதுமட்டுமின்றி துருக்கி அதிபர் எர்டோகனுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அவர் இருந்து வருகிறார். அவர் ஏப்ரல் 1-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி பொறுப்பேற்க இருந்தார்.

இந்தநிலையில் திடீரென அவர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் ‘‘அந்த பதவியை ஏற்றுக்கொள்வது சாத்தியமானது அல்லது கெளரவமான முடிவாக இருக்காது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளப்பின. துருக்கி அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது பணி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது.

குறிப்பாக ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘ஏர் இந்தியா இயக்குநராக துருக்கி நாட்டவர் நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாது. ஏர் இந்தியா தலைமை நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனத்தக்கு தேசத்தின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE